செம்பவாங் டிரைவில் உள்ள ஒரு புளோக்கின் ஆறாவது மாடி வீடு ஒன்றில் விடிகாலை நேரத்தில் மூண்ட தீயில் பாதிக்கப்பட்ட இரு சிறார்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீட்டின் வசிப்பறையில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் மூலம் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட புலன்விசாரணை மூலம் தெரிவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தண்ணீரையும் நுரையையும் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது.
குடிமைத் தற்காப்புப் படையினர் அங்கு சென்றதற்கு முன்பாகவே தீ மூண்ட வீட்டில் இருந்து ஆறு பேர் தாங்களாகவே வெளியேறிவிட்டனர். அவர்களில் நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்களில் ஐந்து வயதுக்கும் குறைந்த அந்த இரண்டு சிறார்களும் அடங்குவர்.
இதர இரண்டு பேர் காயமடைந்து இருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகத் தற்காப்புப் படை கூறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேரை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
இதனிடையே, தாங்கள் அதிகாலை சுமார் 3.30 மணிக்கு வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாக அந்தப் புளோக்கின் குடியிருப்பாளர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.