எச்ஐவி பாதிப்புள்ள 44 வயது ஆண் நண்பருடன் நெருக்கமாகப் பழக மறுத்த 30 வயது ஆடவர் ஒருவர், அந்த நண்பரைக் கத்தியால் குத்தினார். நேற்று அந்த ஆடவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ஒன்பது பிரம்படிகளும் $3,600 அபராதமும் விதிக்கப்பட்டன.
கூட்டுரிமை வீடு ஒன்றில் இருவரும் மே 2018ல் வாடகைக்குத் தங்கியிருந்தனர். அதே ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதற்கு முந்தைய இரவு ஆடவர் வேறோர் ஆணுடன் வீடு திரும்பியதாகக் கூறப்பட்டது. நண்பரின் எச்ஐவி பாதிப்பு குறித்தும் அவருடன் நெருக்கமாக ஆடவர் பழக மறுப்பது குறித்தும் இரண்டு பேரிடையே சச்சரவு மூண்டது.
ஆடவர் நண்பரைக் கத்தியால் குத்தியதில் அவரின் சிறுகுடலில் காயம் ஏற்பட்டு அதிலிருந்து ஒரு சிறு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது.

