தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-மாஸ்கோ விமானச் சேவைகள் காலவரம்பின்றி ரத்து: எஸ்ஐஏ

1 mins read
f05566e4-8cd9-4827-8c59-9750ef6afe85
-

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கும் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கும் இடையே விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் "செயல்பாட்டு காரணங்கள்" கருதி உடனடியாக ரத்து செய்துள்ளது.

மாஸ்கோ சென்றுவரும் விமானச் சேவைகளை ரத்து செய்வதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இணையத்தளத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 28) தெரிவித்தது. இதனால், SQ362, SQ361 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளிடமும் மன்னிப்புக் கூறிய எஸ்ஐஏ, அவர்கள் பயன்படுத்தாத பயணச்சீட்டுகளுக்கான மொத்த தொகையும் திருப்பித் தரப்படும் எனக் கூறியது.

மேலும், பயண முகவர்கள் அல்லது துணை விமான நிறுவனங்களின் வழி பதிவு செய்துகொண்ட பயணிகள் உதவி பெறுவதற்கு அவரவர்களின் பயண முகவர்களையும் விமான நிறுவனங்களையும் நாடும்படி எஸ்ஐஏ பரிந்துரைத்தது.

உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களை உலக நாடுகள் கண்டிக்கும் அடிப்படையிலேயே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ரஷ்யாவுடனான அதன் சேவைகளை ரத்து செய்துள்ளது.

தனது வான்வெளியை ரஷ்யாவிற்கு மூடப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் ஞாயிற்றுகிழமை கூறியது. இதன் அடிப்படையில், ரஷ்யா அல்லது ரஷ்யர்களுக்குச் சொந்தமான எந்த விமானத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வெளிக்குள் வர அனுமதி இல்லை.