மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்றுள்ள முதலாவது மின்சார வாகனம் தனது நடவடிக்கைகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இதுபோன்ற சேவைகள் சிங்கப்பூரில் உள்ள முதியோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் வசதியாகவும் இருக்கும்.
தொண்டூழிய அமைப்பான சாட்டா சமூக சுகாதார நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தை, தடுப்பூசிகள், மருத்துவ ஆலோசனைகளை நடத்தவும் பயன்படுத்த லாம்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கால் தொடங்கப்பட்ட இப்பேருந்து, உடற்குறையுள்ளோருக்கான பீஷான் இல்லம் போன்ற சாட்டாவின் தற்போதைய 24 பங்காளிகளுக்கு சேவையாற்றும்.
ஒருமுறை அதிகபட்சமாக இரண்டு நோயாளிகளுக்கு சேவையாற்றக்கூடிய பேருந்து, விழித்திரை புகைப்படம் எடுத்தல், ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு பாதப் பரிசோதனை, கொவிட்-19 தடுப்பூசிகள் போன்ற சேவைகளை வழங்கும். அடிப்படை மருந்துகளும் பேருந்தில் வைக்கப்பட்டுள்ளன.
பேருந்தில் ஒரு மருத்துவர், ஒரு தாதி, ஆவணங்களைப் பதிவிடும் இரு ஊழியர்கள் ஆகியோர் இருப்பார்கள்.
சாட்டா சமூக சுகாதார நிறுவனத்தின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சிறப்புப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முழுமையாக மின்னூட்டம் செய்யப்பட்ட மின்சாரப் பேருந்து 200 கிமீ ஓடக்கூடியது என்றும் அந்த மின்சக்தியில் அது ஒரு நாள் முழுவதும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, சாட்டா 10 டீசல் வாகனங்களைப் பெற்றுள்ளது. அவை பல்வேறு அளவுகளில் வருகின்றன மற்றும் எக்ஸ்ரே, மேமோகிராம் பரிசோதனைகளைச் செய்யும் ஆற்றல்களைக் கொண்டுள்ளன.
2030ஆம் ஆண்டிற்குள் தனது வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற சாட்ட திட்டமிட்டுள்ளது என்று சாட்டா சமூக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் புவா தெரிவித்தார்.