ஈசூன் பூங்காவில் மாது ஒருவரைத் தாக்கி நினைவிழக்கச் செய்த காட்டுப் பன்றி நேற்று முன்தினம் பிடிபட்டுவிட்டதாக தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து ஈசூன் பூங்கா மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டிருப்பதாக, உள்துறைத் துணையமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டார்.
பொதுமக்கள் மீண்டும் பூங்காவுக்குச் செல்லமுடிவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் தற்காலிகத் தடுப்புகளை அகற்றிவருவதாகவும் குறிப்பிட்டார்.
மார்ச் 9ஆம் தேதி மாலை ஆறே முக்கால் மணியளவில், புளோக் 846 ஈசூன் ஸ்ட்ரீட் 81இல் அந்தக் காட்டுப் பன்றி பெண் ஒருவரைத் தாக்கியது. பின்னர் அது, ஈசூன் பூங்காவில் உள்ள காட்டுப் பகுதிக்குள் மறைந்துவிட்டது. அதனையடுத்து பூங்கா மூடப்பட்டதுடன், பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டன.
குடியிருப்பாளர்களின் புரிந்துணர்வுக்கு நன்றி தெரிவித்த துணையமைச்சர், காட்டுப் பன்றியைப் பிடிப்பதற்கு அயராது உழைத்த தேசியப் பூங்காக் கழகம், அந்த வட்டார நகர மன்றம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும் நன்றி கூறினார். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி காட்டுப்பன்றி கருணைக்கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.