சிறுமியைப் பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஆடவர், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் செல்லாமல் சிங்கப்பூரிலிருந்து தப்பிச் செல்ல முயன்றார். சிங்கப்பூரிலிருந்து தம்மைத் தப்பிக்க வைக்கக்கூடிய ஒருவரைத் தேடி அந்த ஆடவர் புலாவ் உபின் தீவுக்குச் சென்றார். ஆனால் அங்கிருந்து மலேசியாவுக்குச் செல்ல தமக்கு உதவக்கூடிய எவரையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் சிங்கப்பூருக்கு அவர் திரும்பினார். மறுநாள் பென்கூலன் வட்டாரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த 22 வயது ஆடவருக்கு நேற்று ஒன்பது ஆண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
15 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.
2017ஆம் ஆண்டு பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51 உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அச்சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய இரண்டு ஆடவர்களில் அவரும் ஒருவர். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அந்த இரு ஆடவர்
களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அதிகாலை கட்டடத்தின் தரைத்தளத்தில் அச்சிறுமி குடிபோதையில் இருந்தார். மற்ற நண்பர்கள் அங்கிருந்து சென்றதும் இந்த இரு ஆடவர்களும் அச்சிறுமியை சீரழித்தனர்.
சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அச்சிறுமியின் அழு குரலைக் கேட்டு அவரை அணுகினர்.
நடந்ததைப் பற்றி அச்சிறுமி அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மற்றோர் ஆடவருக்கு எட்டு ஆண்டுகள், பத்து மாதங்கள், 27 நாள்கள் சிறையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.