சிங்கப்பூரில் சென்ற ஆண்டு பிள்ளைகள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் வெகுவாக அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ல் பத்தாண்டு இல்லாத வகையில் இத்தகைய சம்பவங்கள் உயர்ந்ததைத் தொடர்ந்து சென்ற ஆண்டும் இவை கூடியுள்ளன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதனைத் தெரிவித்தன.
அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவை மூலம் சென்ற ஆண்டு 2,141 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இது 63 விழுக்காடு அதிகம்.
சென்ற ஆண்டு விசாரிக்கப்பட்ட சம்பவங்களில் 910, பிள்ளைகளைக் கவனிப்பின்றி விட்டுச் சென்றது தொடர்பானவை. 2020ல் இத்தகைய 375 சம்பவங்களே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
பிள்ளைகள் முறையான மேற்பார்வையில் இல்லாதது, உணர்வுபூர்வமாகத் துன்புறுத்தலுக்கு ஆளானது, உரிய மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படாதது ஆகியவை இத்தகைய சம்பவங்களில் அடங்கும்.
விசாரணையில், நான்கு சிறுவர்களுக்கு உணவோ மின்சார வசதியோ வீட்டில் கிடைக்கவில்லை என்று தெரியவந்தது.
நிலையான வேலை இல்லாமல் அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் நிதிச் சிக்கல்களை எதிர்நோக்கியது இதற்குக் காரணம்.
கவனிப்பின்றி விடப்பட்ட பிள்ளைகள் பசியோடு வீட்டு வேலைகளைச் செய்ய முயன்றதில் அல்லது சமைக்க முற்பட்டதில் காயப்பட்ட சம்பவங்களும் கண்டறியப்பட்டது.
பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவங்களும் 2020ஆம் ஆண்டைவிட சென்ற ஆண்டு 70 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறப்பட்டது. இது 11 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகம்.
2021ஆம் ஆண்டில் குழந்தைகள் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவங்கள் 16 விழுக்காடு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகள், குடும்ப சேவை நிலையங்கள் உள்ளிட்ட சமூகப் பங்காளித்துவ அமைப்புகளின் பரிந்துரைகளின்பேரில் சென்ற ஆண்டு கூடுதலான சம்பவங்கள் விசாரிக்கப்பட்டதாய் அமைச்சு குறிப்பிட்டது.
மக்களைச் சென்றடையும் முயற்சிகள் பலனளித்ததுடன் குடும்ப வன்முறை தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது.
குடும்ப வன்முறை குறித்துப் புகார் அளிப்பதற்கான 24 மணி நேரத் தொலைபேசிச் சேவையை அதிகமானோர் நாடியதாக அமைச்சு கூறியது.
வன்முறைக்கு எதிரான தேசிய அளவிலான உதவிக்கு 1800-777-0000 என்ற 24 மணி நேரத் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.