ஊன்றுகோல் உதவியுடன் சாலை யைக் கடந்து கொண்டிருந்த முதியவர் ஒருவரை, மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் கையால் குத்தினார்.
முதியவர் தரையில் விழுந்து விட்டார். என்றாலும் அப்போது வந்துகொண்டிருந்த வாகனத்தில் அடிபடாமல் நூலிழையில் அந்த முதியவர் தப்பிவிட்டார்.
வேலு பிள்ளை ராமன் குட்டி, 70, என்ற அந்த முதியவருக்கு நீரிழிவு நோயும் உண்டு என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
முதியவரைத் தாக்கிய முகம்மது காசிம் புவாங், 58, என்பவருக்கு நேற்று மூன்று வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம், ஹவ்காங் ஸ்திரீட் 92ல் உள்ள ரீஜென்ட் வேல் கூட்டுரிமை புளோக் அருகே 2020 டிசம்பர் 5ஆம் தேதி இரவு சுமார் 7.20 மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி திரு மார்வின் பே, நல்ல வேளையாக அந்த முதியவர் வாகனத்தில் அடிபடாமல் தப்பினார் என்று தீர்ப்பில் கூறினார்.
சாலையை முதியவர் கடந்து கொண்டிருந்தபோது, முகம்மது காசிம் வாகனத்தில் வேகமாக வந்ததாகவும் முதியவர் மீது மோதாமல் இருக்க முயன்றதில் முகம்மது தன் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கீழே விழுந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எழுந்து முதியவரிடம் சென்ற முகம்மது காசிம், முதியவரின் இடது முகத்தில் ஒரு குத்துவிட்டார். இதனால் முதியவர் கீழே விழுந்துவிட்டார். அப்போது எதிரே வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. நல்லவேளையாக முதியவர் தப்பினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

