நிறுவனம் ஒன்றிடம் இருந்து காய்கறிகளை வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாித்து $2.67 மில்லியன் வர்த்தகக் கடன் பெற்று மோசடி செய்த குற்றத்திற்காக மற்றொரு நிறுவன இயக்குநருக்கு நேற்று நீதிமன்றத்தில் 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டே கிம் யோங், 52, எனப்படும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இரு காய்கறி விற்பனை நிறுவனங்களை நடத்தி வரும் டான் டெக் தியாங், 54, என்பவரை அணுகி அவரது நிறுவனத்தில் காய்கறிகள் வாங்கியதாக ஆவணங்களைத் தயாரித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
வர்த்தகப் பங்காளி என்பதால் டேயின் கோரிக்கையை டான் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப போலி ஆவணங்களை வழங்கினார்.
பொருள்கள் வாங்கியதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகைக்கு நிகராக டே வங்கியின் கடன் கேட்டு விண்ணப்பிப்பார். டானின் வர்த்தகக் கணக்கில் வங்கி அந்தத் தொகையை வரவு வைக்கும். பின்னர் அந்தத் தொகை டேயின் நிறுவனக் கணக்கிற்கு மாற்றப்படும். வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது ேடயின் பொறுப்பு.
இவ்வாறு 23 போலி ஆவணங்களை டானின் நிறுவனம் தயாரித்தது. அவற்றின் அடிப்படையில் ஓசிபிசி வங்கி $1.46 மில்லியன், யுஓபி வங்கி $727,735.57, மே பேங்க் $484,000 கடன்களை வழங்கின. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு தொகை திருப்பிச் செலுத்தப்பட்டு உள்ளது.
2020 ஜனவரி 13ஆம் தேதி டேயின் நிறுவனத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் இந்த மோசடி குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அது வெளிச்சத்திற்கு வந்தது.
டே தம்மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதர 16 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. மோசடிக்கு ஒத்துழைத்த டான் குறித்து நீதிமன்ற ஆவணங்கள் எதனையும் குறிப்பிடவில்லை.

