கொவிட்-19 தொற்றுக் காரணமாக பல முதியவர்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர். அவர்களைப் பராமரித்துக்கொள்பவர்களுக்குப் பளு அதிகரித்தது. இதன் காரணமாக முதியவர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக முதியவர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் ஏறுமுகமாக உள்ளன. 2019ஆம் ஆண்டு 232 சம்பவங்கள் பதிவாகின. 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 283. சென்றாண்டு 338 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தப் புள்ளிவிவரங்களைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான துணையமைச்சர் சுன் ஷுவெலிங் இம்மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் பகிர்ந்துகொண்டார்.
தொற்று சூழ்நிலையால் பல முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் அவர்களை வீட்டிலேயே 24 மணிநேரம் வைத்துபார்க்கும் நிலை பராமரிப்பாளர்களுக்கு ஏற்பட்டது. அதனால் அவர்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்காமல் போகிறது.
இந்நிலையில் அவர்கள் தங்கள் கோபத்தை மூத்தோரிடம் காட்டலாம். அவர்களைத் திட்டுவது, மிரட்டுவது, இழிவுபடுத்துவது போன்ற செயல்கள் துன்புறுத்தலுக்குச் சமம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
துன்புறுத்தப்படும் பல முதியவர்கள் அதிகாரிகளிடம் புகார் செய்வதில்லை. எங்கு அவ்வாறு செய்தால் தாங்கள் உறவினர்களால் கைவிடப்படுவர் அல்லது தங்கள் வீட்டிலிருந்து அகற்றப்படுவர் என்ற அச்சம் பலருக்கு உண்டு. சிலர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க துன்புறுத்தலைச் சகித்துக்கொள்கின்றனர்.


