செம்ப்மரீன் என்றழைக்கப்படும் சிங்கப்பூரின் செம்ப்கார்ப் மரீன் நிறுவனம், கெப்பல் கார்ப் நிறுவனத்தின் கடல், கடலோரப் பிரிவுடன் இணைகிறது. அதற்கு வகைசெய்யும் பல பில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இவ்விரு நிறுவனங்களுக்கும் தெமாசெக் நிறுவனத்தின் ஆதரவு உள்ளது. கடல், கடலோரத் துறையில் இருந்துவரும் சவால்களைத் தொடர்ந்து இணைவது குறித்து இரு நிறுவனங்களும் சுமார் ஓராண்டாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளன.
"சிங்கப்பூரில் உள்ள இரண்டு முன்னணி கடல், கடலோர நிறுவனங்கள் இணையும்போது கூடுதல் வலுவான ஒரு நிறுவனம் உருவாகும். அதன் மூலம் பல கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதுடன் மாறிவரும் எரிசக்தி சூழலில் மேலும் ஆக்ககரமான முறையில் போட்டியிடமுடியும்," என்று கெப்பல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அதன் கடல், கடலோரப் பிரிவின் தலைவருமான லோ சின் ஹுவா கூறினார்.
இரு நிறுவனங்களும் இணைவதன் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தில் தெமாசெக் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும். தெமாசெக் 33.5 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்டிருக்கும். தெமாசெக், செம்ப்மரீனின் பெரும்பான்மை பங்குதாரர் நிறுவனமாக இருந்து வந்துள்ளது.
புதிய நிறுவனத்தின் 56 விழுக்காட்டுப் பங்குகள் கெப்பல் நிறுவனத்திற்கும் அதன் பங்குதாரர்களுக்கும் சொந்தமாகும். புதிய நிறுவனத்தின் மதிப்பு 8.7 பில்லியன் வெள்ளி.

