சிங்கப்பூரில் அடுத்த சில மாதங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் வட்டாரங்களில் நிலவும் இரண்டு வானிலை நிகழ்வுகளால் சிங்கப்பூர் ஆகாயவெளியில் அதிகமான மழை மேகங்கள் உருவாகும் என்று அது கூறியது.
இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை பசிபிக் பெருங்கடலில் நிலவும் 'லா நினா' நிகழ்வால் தென்கிழக்காசியாவில் அளவுக்கதிகமான மழையும் வெள்ளமும் ஏற்படுவது வழக்கம்.
இந்தமுறை 2020ஆம் ஆண்டிலிருந்து 'லா நினா' நீடிக்கிறது. இதனால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது ஆக அதிக அளவில் சென்ற ஆண்டு மழை பெய்ததாக ஆய்வகம் முன்னர் தெரிவித்திருந்தது.
மழை அதிகமாகப் பெய்வதற்கான இரண்டாவது காரணம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் மற்றொரு வானிலை நிகழ்வு.
'இண்டியன் ஓஷியன் டைபோல் நெகட்டிவ் ஃபேஸ்' எனப்படும் இந்நிகழ்வால் நிலநடுக்கோட்டில் இருந்து தென்கிழக்காசியா, ஆஸ்திரேலியா ஆகிய வட்டாரங்கள்வரை காற்று வலிமைபெற்று கடல்நீரின் வெப்பம் கூடுவதுடன் அதிகமான மழை மேகங்கள் உருவாகும்.
இதனால் சிங்கப்பூரில் இம்மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரையில் சரசரி அளவுக்கும் மேலான மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் கூறியது.
ஆனால் இவ்விரு வானிலை நிகழ்வுகளாலும் சிங்கப்பூரின் வெப்பநிலை அதிகம் பாதிக்கப்படமாட்டாது என்றும் கருதப்படுகிறது.
இம்மாதத்தின் எஞ்சிய நாள்களில் அன்றாட வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. சில நாள்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை எட்டக்கூடும். உலக வெப்பமயமாதலால் பருவநிலை பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

