தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று வெளியிட்ட நகர மன்றங்களின் நிர்வாக அறிக்கையில், மூன்று நகர மன்றங்கள் சேவை, பராமரிப்புக் கட்டண பாக்கியால் ஆரஞ்சுக் குறியீட்டைப் பெற்றுள்ளன.
சுவா சு காங் நகர மன்றம், ஜுரோங்-கிளமெண்டி நகர மன்றம், செங்காங் நகர மன்றம் ஆகியவை இவை. எஞ்சிய 14 நகர மன்றங்களும் பச்சைக் குறியீட்டைப் பெற்றுள்ளன.
பச்சைக் குறியீடு நகர மன்றம் சிறப்பாகச் செயல்படுவதையும் ஆரஞ்சுக் குறியீடு நிர்வாகம் திருப்தியான வகையில் இல்லை என்பதையும் சிவப்புக் குறியீடு மோசமான நிர்வாகத்தையும் குறிக்கும்.
ஆரஞ்சுக் குறியீடு வழங்கப்பட்ட நகர மன்றங்களில் 40 முதல் 60க்கும் குறைவான விழுக்காட்டுக் குடும்பங்கள், மூன்று அல்லது அதற்கும் அதிகமான மாதங்களுக்கு உரிய மாதாந்தர சேவை, பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்தவில்லை. மற்ற 14 நகர மன்றங்களில் இந்த விழுக்காடு இதற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
நான்கு அம்சங்களின் அடிப்படையில் நகர மன்றங்களில் செயலாக்கம் மதிப்பிடப்படுகிறது.
குடியிருப்புப் பேட்டையின் தூய்மை, அதன் நிர்வாகம், மின்தூக்கிச் செயல்பாடு, சேவை, பராமரிப்புக் கட்டண நிர்வாகம் ஆகியவை இவை.
குடியிருப்புப் பேட்டையின் தூய்மை, அதன் நிர்வாகம், மின்தூக்கிச் செயல்பாடு ஆகிய மூன்று அம்சங்களில் அனைத்து 17 நகர மன்றங்களுமே பச்சைக் குறியீடு பெற்றுள்ளன.
நகர மன்றங்களும் அவற்றின் கணக்குத் தணிக்கையாளர்களும் சமர்ப்பிக்கும் விவரங்களின் அடிப்படையில் இந்தக் குறியீடுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டிலிருந்து நகர மன்ற நிர்வாக அறிக்கை இரண்டு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
இந்த நான்கு அம்சங்களின் அடிப்படையிலான குறியீடுகள் முதல் பகுதியிலும், நிதி நிலை அறிக்கையின் அடிப்படையிலான மதிப்பீடு நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியிடப்படும் இரண்டாம் பகுதியிலும் இடம்பெற்றிருக்கும்.
நகர மன்றங்கள் நிதி நிலை அறிக்கையை செப்டம்பர் மாதத்தில்தான் தேசிய வளர்ச்சி அமைச்சிடம் சமர்ப்பிக்கும் என்பதால் இரண்டாம் பகுதி நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியாகும்.
இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் நகர மன்றங்களின் மதிப்பீடு முறையில் மாற்றம் ஏதுமில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது.