அதிபர் ஆலோசனை மன்றத்தில் ஆக அதிக ஆண்டுகள் பணியாற்றிய திரு எஸ். தனபாலனுக்கு தமது பாராட்டைத் தெரிவித்துள்ளார் அதிபர் ஹலிமா யாக்கோப். தமது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து அதிபர் பதிவு செய்திருந்தார்.
திரு தனபாலன் மன்றத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றினார். மூன்று அதிபர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில் அவர் மன்றத்திலிருந்து ஓய்வுபெற்றதாக அதிபர் குறிப்பிட்டார். திரு தனபாலன் ஆற்றிய சேவையைப் பாராட்ட அவருக்கு இஸ்தானாவில் விருந்து வழங்கினார் அதிபர்.
அரசாங்க இருப்புநிதி, பொதுத் துறை பதவி நியமனங்கள் போன்ற தாம் எடுத்த முக்கிய முடிவுகளில் திரு தனபாலன் சிறந்த ஆலோசனை வழங்கியதாக அதிபர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.மன்றம் எடுத்த பல முக்கிய முடிவுகளிலும் திரு தனபாலனின் பங்களிப்பு இருந்ததாகக் கூறப்பட்டது. உதாரணத்திற்கு 2009ல் நாடு ஆக மோசமான மந்தநிலையைச் சந்தித்தபோது, அரசாங்க இருப்புநிதியிலிருந்து முதன்முறையாக சேமிப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து திரு தனபாலன் ஆலோசனை வழங்கினார். அண்மையில் தொற்றுக் காலத்தின்போதும், இருப்புநிதியிலிருந்து சேமிப்பை எடுப்பதற்கு முன் திரு தனபாலனுடைய ஆலோசனையை நாடியதாக அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
திரு தனபாலன் நிதி அமைச்சில் தமது பொதுச் சேவைப் பணியைத் தொடங்கினார். 1976ல் அவர் காலாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 வரை அந்த பதவியில் அவர் வகித்தார். தேசிய வளர்ச்சி, வெளியுறவு, கலாசாரம், சமுதாய மேம்பாடு ஆகிய அமைச்சுகளை அவர் வழிநடத்தினார். 1992ல் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர், 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தெமாசெக் நிறுவனம் போன்ற தனியார் நிறுவனங்களிலும் அவர் தலைமைத்துவ பதவியில் இருந்தார்.
"திரு தனபாலனின் அயராத சேவைக்கும், முக்கிய பங்களிப்புக்கும் என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். அவர் உடல்நலத்துடன் இருக்கவும் அவருடைய ஓய்வுக்காலம் சிறப்பாக அமையவும் நான் வாழ்த்துகிறேன்", என்று அதிபர் தமது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

