2017ஆம் ஆண்டில் வாடகை மோசடியில் ஈடுபட்டதற்காக ஓராண்டுக்கு மேல் விசாரணையின் கீழ் இருந்த சொத்து முகவருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதன் சுஜித்ரன் ஏறக்குறைய 200 வெளிநாட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 308,815 வெள்ளி மோசடி செய்துள்ளார்.
புரோப்நெக்ஸ் சொத்து நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் 2017ஆம் ஆண்டில் நீக்கப்பட்டார்.
சொத்து விற்பனையாளர் என்ற தகுதியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
அப்படியும் 'டிஎஸ்ஆர் லாஜிஸ்டிக்ஸ்' என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, சிங்கப்பூரரான அவர் தொடர்ந்து பலரை ஏமாற்றி யிருக்கிறார்.
தற்போது 54 வயதாகும் ராமநாதனுக்கு நேற்று நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
சிங்கப்பூரில் சில இடங்கள் வாடகைக்கு இருப்பதாக விளம்பரங்களை வெளியிட்டு அவர் ஏமாற்றுவார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாடகை கேட்டு வருபவர் களிடம் அவர் வாடகை ஒப்பந்தங்களை செய்து கொள்வார்.
வாடகைக்கு தன்னால் இடத்தைக் கொடுக்க முடியாது என்பதை நன்கு அறிந்தும் அவர் வாடகை ஒப்பந்தங்களைப் போட்டதாக நீதிமன்றத்தில் பேசிய அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
வாடகை இடத்தை உறுதி செய்ய வேண்டுமானால் அதற்கு குறிப்பிட்ட வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று ராமநாதன் கூறுவார்.
ஆனால் வாடகை வீட்டை கொடுப்பதற்கான தேதி நெருங்கியதும் அவர் பல்வேறு காரணங்களைக் கூறி ஒத்திப் போடுவார்.
பின்னர் ஒரு கட்டத்தில் அந்த வாடகை ஒப்பந்தம் ரத்தாகிவிடும்.
ராமநாதன் வைப்புத் தொகையை வைத்துக் கொள்வார்.
ஒரு சம்பவத்தில் 2017 மே மாதத்தில் ஹவ்காங்கில் முழு வீடு வாடகைக்கு இருப்பதாக அவர் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.
அதைப் பார்த்து மூன்று பேர் அவரை அழைத்தனர். மூவரும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொருவரிடமிருந்து வைப்புத் தொகையாக அவர் 1,400 வெள்ளி பெற்றுக் கொண்டார்.
மூவரும் வாடகை வீட்டில் குடியேற முடியாமல் போனது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.
இதே முறையைப் பயன்படுத்தி ராமநாதன் பலரை ஏமாற்றி இருக்கிறார்.

