ஷெல் நிறுவனத்தில் வேலை பார்த்த காய் ஸி ஸோங் என்ற ஆடவர், தன் சகாக்களுடன் சேர்ந்து, 2014 ஆகஸ்ட் மாதத்திற்கும் 2018 ஜனவரி மாதத்திற்கும் இடையில் US$93 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வாயு எண்ணெய்யைச் சட்டவிரோத மாகக் கையாண்டார்.
அதற்குக் கைமாறாக அவருக்கு US$1.3 மில்லியனுக்கும் US$1.6 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகை ($2.3மி) கிடைத்தது. அதைக் கொண்டு பாசிர் ரிஸ் ஹைட்சில் கூட்டுரிமை வீடு ஒன்றை காய், 39, வாங்கினார்; ஆடிஏ3 கார் ஒன்றை வாங்கினார்; தலா $57,000 முதல் $73,500 வரை விலையுள்ள ஆடம்பர கைக்கடிகாரங்களை அவர் வாங்கினார்.
நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல குற்றங்களை நேற்று காய் ஒப்புக்கொண்டார். காய்க்கு அக்டோபர் 20ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாயு எண்ணெய் என்பது சுத்திகரிக்கப்படாத எண்ணெய். சில நாடுகளில் டீசலுக்குப் பதிலாக அது எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மோசடியின் காரணகர்த்தா என்று குறிப்பிடப்படுவோரில் ஒருவரான ஜுவாந்தி புங்கோட், 45, என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் ஏறக்குறைய $128 மில்லியன் எண்ணெய்யைத் தவறாகக் கையாண்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட பலருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.