நோயாளிகளில் சிலருக்கு இப்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்குப் பதிலாக வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுவதற்கான தெரிவு வழங்கப்படுகிறது.
தோல் தொற்று, சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்று, கொவிட்-19 போன்ற பொதுவான மருத்துவப் பிரச்சினைகள் உடைய நோயாளிகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம்.
மருத்துவர்கள், தாதியர், மருந்தாளர்கள், சிகிச்சையாளர்கள் அடங்கிய குழு, நோயாளியின் வீட்டிற்குச் சென்று அல்லது தொலை மருத்துவம் மூலமாக பராமரிப்பு வழங்கும்.
நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையைப் போன்றே வீடுகளில் நோயாளிகள் பெறுவர். நோயாளியின் உடல்நிலை மோசமடைந்தால் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்படலாம்.
இந்தப் புதிய பராமரிப்பு முறை நேற்று அறிவிக்கப்பட்டது. நோயாளிக்குக் கூடுதல் வசதியை ஏற்படுத்தித் தரும் இது, மனிதவள செயல்திறனை மேம்படுத்துகிறது. மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைப் பிரிவுகளைக் கட்ட தேவையின்றி படுக்கை ஆற்றலையும் இது அதிகரிக்கும்.
சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் வேளையில், இந்தப் பராமரிப்பு முறை முக்கியமானதாக அமைகிறது.
தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம், ஈசூன் ஹெல்த் மருத்துவ இல்லமும் 2019க்கும் 2021க்கும் இடையே இந்தப் பராமரிப்பு முறைக்கான சாத்தியக்கூறு ஆய்வை நடத்தின.
வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுவது குறிப்பிட்ட நோயாளிகளுக்கு ஆக்கபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதை முன்னோட்ட சோதனைகள் காட்டின.
இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்ற அலுவலகம் இந்தப் பராமரிப்பு முறையை விரிவுபடுத்தியுள்ளது.
மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும்போது கிடைக்கும் கட்டணக் கழிவைப் போன்றே வீட்டில் சிகிச்சை பெறும்போதும் கிடைக்கும். வீட்டில் சிகிச்சை பெறும்போதும் விதிக்கப்படும் கட்டணம், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது விதிக்கப்படும் கட்டணத்துடன் ஒத்து இருக்கும்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள இதேபோன்ற மருத்துவப் பராமரிப்பு சிகிச்சைகள், மருத்துவமனை சிகிச்சைக்கு ஈடான விளைவுகளைக் காட்டியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
வீட்டில் குணமடையும் நோயாளிகள் நன்கு உறங்குவதாகவும் சாப்பிடுவதாகவும் கூடுதலாக நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் விரைவில் குணம் அடைவதாகவும் கருதப்படுகிறது.

