தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒன்-ஃபேரர் ஹோட்டலில் சரங்கோங் வரலாற்றுப் பறவை சிற்பம்

2 mins read
010f941f-b14b-4e75-a26e-01eaba2a9dad
ஒன்-ஃபேரர் ஹோட்டலில் சிற்பம். படம்: ஒன்-ஃபேரர் ஹோட்டல் -

ஆ. விஷ்ணு வர்தினி

'சரங்கோங்' என்ற மலாய் வார்த்தை, சிராங்கூன் ஆற்றுப் பகுதியில் வழக்கமாக காணப்பட்ட ஒரு வகை சதுப்புநிலப் பறவையைக் குறிப்பதாகும். இப்போதைய சிராங்கூன் பகுதி, ரங்கூன் சாலை ஆகியவை அதை வைத்தே, பெயரிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

துணிவுமிக்க, சுதந்திரமான இப்பறவையைத் திருமதி குமாரி நாகப்பன் சிற்பமாக வடித்துள்ளார்.

ஃபேரர் பார்க் எம்ஆர்டி நிலையம் அருகே அமைந்துள்ள 'ஒன்-ஃபேரர்' ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம், இம்மாதம் 18ஆம் தேதி திறக்கப்பட்டது. ஹோட்டலின் ஆறாம் தளத்தின் வெளிப்புற பகுதியில் இச்சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் வரலாற்றில் முக்கியமாக இடம்பெற்றுள்ள சரங்கோங் பறவை குறித்து ஆய்வு மேற்கொண்ட திருமதி குமாரி, அதன் சிறப்புகளைச் சிற்பத்தில் வடிவமைக்க முற்பட்டதாகப் பகிர்ந்துகொண்டார்.

"இப்பறவை, பேச்சு, வெளிப்பாட்டு சுதந்திரத்தைக் குறிக்கிறது. வானத்தை ஆட்கொள்ளும் வல்லமை கொண்ட அதன் பண்பு, அதன் விரிந்த சிறகுகளில் வெளிப் படுகிறது," என்றார் அவர்.

இச்சிற்பம் வரலாற்று அடை யாளமாக மட்டுமன்றி, நம்பிக்கை அளிக்கும் சின்னமாக விளங்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

மேற்கத்திய புராணவியலில் சரங்கோங் பறவை மனிதர்களிடம் தனது சந்ததியினரை ஒப்படைப்பதுபோல இடம்பெறுவதைக் குறிப்பிட்டார் திருமதி குமாரி.

அதற்கேற்ப, கே.கே. மருத்துவமனை இப்பகுதியில் அமைந்துள்ளது வியக்கத்தக்கதாக இருந்ததென அவர் சுட்டினார்.

சிற்பத்தின் திறப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய தலைமை நீதிபதி திரு சுந்தரேஷ் மேனன், சிங்கப்பூரின் சமூக, அரசியல் வரலாற்றில் சிராங்கூன் பகுதி முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்தோரை உள்ளடக்கிய சிங்கப்பூர் சமூகத்தை ஒன்றிணைக்கும் ஒன்றுபட்ட மரபையும் வரலாற்றையும் சரங்கோங் நினைவூட்டுவதாக அவர் கூறினார்.