ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் தன் சக மாணவரைக் கொன்றதாகக் கூறப்படும் இளையர் மீதான கொலைக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டுள்ளது.
அது நோக்கமற்ற மரணம் விளைவித்தல் குற்றச்சாட்டாக நேற்று மாற்றப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட இளையருக்குத் தற்போது 18 வயது ஆகிறது. 2021இல் அச்சம்பவம் நடந்தபோது அவருக்கு 16 வயது என்பதால் அவரது பெயரை வெளியிட முடியாது.
18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு சிறுவர், இளையர் சட்டம் பாதுகாப்பளிக்கிறது.
பூன் லே அவென்யூவில் அமைந்துள்ள ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு கழிவறையில் 2021ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி, காலை 11.16 மணிக்கும் 11.44 மணிக்கும் இடையே, 13 வயது சிறுவனின் மரணத்தை அந்த இளையர் விளைவித்தார் என்று கூறப்பட்டது.
சிறுவனின் கழுத்து, தலை, உடல் ஆகியவற்றை அவர் பலமுறை கோடரியால் வெட்டினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
சிறுவனின் மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்று காவல் துறையின் விசாரணையின் மூலம் தெரியவந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட இளையரை அச்சம்பவத்துக்குப் பிறகு கழிவறையின் வெளியே பல மாணவர்கள் கண்டனர்.
மாணவர்கள் தங்கள் வகுப்பு அறைகளுக்குள் சென்று, கதவு களைப் பூட்டி, வகுப்பாசிரியரை உதவிக்கு அழைக்கும் 'ஓடு-மறைந்துகொள்-கூறு' எனும் அவசரநிலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட இளையர் 2019ல் தற்கொலைக்கு முயன்றார் என்றும் அவர் மனநலக் கழகத்தில் பரிசோதிக்கப்பட்டார் என்றும் நீதிமன்ற விசாரணையில் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
அச்சம்பவத்துக்குப் பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இளையர், தனியார் மாணவராக சாதாரண நிலைத் தேர்வு எழுதினார். இந்த வழக்கு அடுத்து ஏப்ரல் 6அம் தேதி விசாரணைக்கு வரும்.