எண் 10 கம்போங் யூனோசில் இருந்த முன்னாள் கம்போங் யூனோஸ் சமூக நிலையம், இளையர்களுக்கான படைப்பாற்றல் நிலையமாக மாற்றப்படும்.
'விவிட்டா சிங்கப்பூர்' எனும் லாப நோக்கமற்ற அமைப்பு உடனான பங்காளித்துவ முயற்சியில் இந்த மாற்றம் இடம்பெறும் என்று சட்ட அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின் சட்ட அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அரசு சொத்துகள் எப்படி மறுபயன்பாட்டிற்கு விடப்படலாம் என்பதற்கான பல்வேறு உதாரணங்களைச் சுட்டினார்.
படைப்பாற்றலை வளர்க்க உதவும் செறிவூட்டும் திட்டங்களையும் இடவசதிகளையும் விவிட்டா அந்த நிலையத்தில் வழங்கும் என்று திருவாட்டி ரஹாயு சொன்னார்.
பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்டுள்ள சிறுவர்களும் இளையர்களும் தங்கள் ஆர்வத்தைக் கண்டறிந்து, யோசனைகளுக்கு உயிரூட்டி, மேம்பட்ட உலகிற்காக புத்தாக்கத்தில் ஈடுபடுவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்று சட்ட அமைச்சு குறிப்பிட்டது.