தொற்றுநோய் காலத்தில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் கல்வி வசதிகள் முடக்கப்பட்டன
கொள்ளைநோய் காலகட்டத்தில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய படிப்புக்கு பல்வேறு வகையில் இடையூறு ஏற்பட்டதாகக் கூறி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளனர்.
ஏறக்குறைய 95,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடுத்துள்ள இந்த வழக்கில் சிங்கப்பூர் மாணவர்களும் இணைந்துள்ளனர்.
கற்றல் மற்றும் கல்வி தொடர்பான வசதிகளைப் பெற முடியாததால் பல ஆயிரக்கணக்கான டாலர் இழப்பீடாகக் கிடைக்க இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மாணவர்களில் ஒருவரான டேங் லிங்ஸி, தொற்றுநோயால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்றும் கல்வியின் அடிப்படை வசதிகளைப் பெற முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் 25 வயது டேங், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தான் தேர்ந்தெடுத்த பொறியியல் பிரிவில் உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெற முடியும் என்று அவர் நம்பினார்.
நான்கு ஆண்டு படிப்புக்கு அவர் ஆண்டுக்கு 33,400 பவுண்ட் கட்டணமாகச் செலுத்தினார். அதாவது படிப்புக்கான மொத்த கட்டணம் 218,000 சிங்கப்பூர் வெள்ளியாகும்.
தொற்றுநோய் உச்சக்கட்டத்தில் இருந்தபோது பல்கலைக்கழகங்கள் கல்வி வசதிகளை முடக்கின. இதனால் மாணவர்கள் பெற வேண்டிய கல்வியின் தரம் பாதிக்கப்பட்டது என்று திரு டேங் தெரிவித்தார். தற்போது அவர் ஆக்ஸ்ஃபர்டில் எரிசக்தி சந்தைத் துறையில் பகுப்பாய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
"சில ரசாயனம் தொடர்பான சோதனைகளை பல்கலைக்கழகங்களுக்கு வெளியே மாணவர்கள் மேற்கொள்ள முடியவில்லை. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற பாடங்களைப் படிக்கும் மாணவர்களுக்கு நியாயமான கல்விச் சூழல் வழங்கப்படவில்லை," என்றும் அவர் சொன்னார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடையூறுகளுடன் 2022ஆம் ஆண்டில் பட்டதாரியான திரு டேங், சோதனைச் சாலையில் சோதனைகளை முடித்ததுபோல நடிக்க வேண்டியிருந்தது என்றார்.
சிங்கப்பூர் மாணவர்களிடம் பிரபலமான யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசிஎல்), யூனிவர்சிட்டி ஆஃப் பிரிஸ்டால், யூனிவர்சிட்டி ஆஃப் பர்மிங்ஹம் ஆகியவை உட்பட குறைந்தது 18 பிரிட்டிஷ் பல்கலைக் கழகங்களுக்கு எதிராக 95,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.
பிரிட்டனில் செயல்படும் ஹார்கஸ் பார்க்கர், அசர்சன் ஆகிய இரண்டு சட்ட நிறுவனங்கள் மாணவர்களைப் பிரதிநிதிக்கின்றன. வழக்கில் வெற்றி பெற்றால் கிடைக்கும் இழப்பீட்டில் 35 விழுக்காட்டை இந்த இரு சட்ட நிறுவனங்களும் எடுத்துக்கொள்ளும்.
இந்த வழக்கில் பெயர் குறிப்பிடாத 3ஆம் தரப்பு ஒன்றும் சேர்ந்துள்ளது. இது, மாணவர் களின் கோரிக்கைகளுக்காக இணையத்தளம் ஒன்றை அமைத்துள்ளது.

