கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் டீசல் எண்ணெய்யைப் பயன்படுத்தும் வழக்கத்திலிருந்து அகலும் முயற்சியில் புதிதாக 1,000 'ஹைபிரிட்' எனப்படும் பெட்ரோல்-மின்சார வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நீடித்த நிலைத்தன்மையுடைய வழிகளை நிறுவனம் தொடர்ந்து நாடும் ஒரு திட்டமாக இது அமைந்துள்ளது.
'கம்ஃபர்ட்', 'சிட்டிகேப்' டாக்சிகளை இயக்கிவரும் நிறுவனம், கடந்த வியாழக்கிழமையன்று 500 புதிய 'ஹைபிரிட்' டாக்சிகளின் விநியோகத்துக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுத்தது.
இந்த டாக்சிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க இறுதி நாள் மே 12. மேலும் 500 'ஹைபிரிட்' டாக்சிகளின் விநியோகத்தை 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பெற்றுக்கொள்ளும் தெரிவையும் இந்தத் திட்டம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
இதன்படி மொத்தம் 1,000 'ஹைபிரிட்' டாக்சிகளை நிறுவனம் கைப்பற்றலாம். இது கம்ஃபர்ட்டெல்குரோவின் தற்போதைய 8,700 வாகனங்களில் ஏறத்தாழ 11 விழுக்காடாகும்.
2024ஆம் ஆண்டோடு டீசல் எண்ணெய்யில் இயங்கிவரும் தன் 'ஹியுன்டே ஐ40' டாக்சிகள் செயல்படும் காலம் முடிவடைய உள்ளது என்றும் அவற்றுக்குப் பதிலாக நிறுவனத்தின் இந்தப் புதிய 'ஹைபிரிட்' வாகனங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக, டீசல் எண்ணெய் டாக்சிகளும் 'ஹைபிரிட்' டாக்சிகளும் எட்டு ஆண்டுகள் வரை இயங்கலாம். மின்சார டாக்சிகள் பத்தாண்டுகள் வரை இயங்கலாம்.
கம்ஃபர்ட்டெல்குரோவின் கீழ் 2013ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் 'ஹியுன்டே ஐ40', நிறுவனத்தின் ஆகப் பழைய வாகன வகையாகும்.
கடந்த சில ஆண்டுகளாக தன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் 'ஹைபிரிட்' டாக்சிகளை மொத்தமாக கம்ஃபர்ட்டெல்குரோ வாங்கி வருகிறது.
சிங்கப்பூரின் டாக்சி துறையில் பெரும்பாலான டாக்சிகள் 'ஹைபிரிட்' வகையைச் சார்ந்தவை என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
மின்னூட்டு மையங்கள் கிடைப்பது குறித்தும் வாகனங்களுக்கு மின்னூட்டும் நேரம் குறித்தும் டாக்சி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்ததை அடுத்து மின்சாரத்தில் முழுமையாக இயங்கும் வாகனங்களைக் கைப்பற்றும் நிறுவனத்தின் முயற்சி மெதுவடைந்தது. இந்நிலையில் புதிய 'ஹைபிரிட்' டாக்சிகளின் பக்கம் அது தன் கவனத்தைத் தற்போது திருப்பியுள்ளது.
சிங்கப்பூரில் பாதி எண்ணிக்கையிலான டாக்சிகள் 2030ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்று முன்னதாக டாக்சி துறை கடப்பாடு தெரிவித்திருந்தது.

