மருத்துவமனைகளில் துன்புறுத்தலுக்கு ஆளாவதில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்து மருத்துவமனைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
டான் டோக் செங் மருத்துவமனை தனது முன்களப் பணியாளர்களான தாதியர் மற்றும் நோயாளி சேவைப் பிரிவு உதவியாளர்களைத் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க தற்காப்புக் கலை கற்றுத்தரும் வகுப்பை நடத்தி வருகிறது.
மருத்துவமனைப் பணியாளர்கள் பலவிதங்களில் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது குறித்து முத்தரப்புப் பணிக்குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.
கிட்டத்தட்ட 3,000 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் பொதுமக்களில் 1,500 பேரும் பங்கேற்ற அந்த ஆய்வில், மூன்றில் இருவருக்கு மேற்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் கடந்த வாரம் துன்புறுத்தப்பட்டது அல்லது தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.
அவர்களில் பாதிப்பேர் வாரத்தில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது துன்புறுத்தலை எதிர்கொண்டதையும் ஆய்வு கண்டறிந்தது.
பொது சுகாதாரப் பராமரிப்புத் துறையில் துன்புறுத்தலுக்கு முடிவுகட்டும் விதமாக கொள்கை ஒன்றை சுகாதார அமைச்சு வகுத்து வருகிறது. கொள்கையில் இடம்பெறவேண்டிய விவரங்களை சுகாதாரப் பராமரிப்புத் துறை அமைப்புகள் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் வழங்க உள்ளன.
இதற்கு முன்னர், தனது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் உடல் ரீதியாகவும் வார்த்தைகளாலும் துன்புறுத்தப்படும் போக்கு அதிகரிப்பதைக் கவனித்த டான் டோக் செங் மருத்துவமனை, 2017ஆம் ஆண்டு அச்சத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு எதிரான வேலையிடப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது.
அதன் ஒரு பகுதியாக, 2019ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 100 பேருக்குத் தற்காப்புத் திறன் நுட்பங்கள் கற்றுத் தரப்பட்டன. அவர்கள் பின்னர் அந்த திறன்களை 3,000 முன்களப் பணியாளர்களுக்குச் சொல்லித் தந்தனர்.
வன்முறையை அடையாளம் கண்டு அதற்கான சூழலைத் தவிர்ப்பது எப்படி என்பது உள்ளிட்ட 8 தற்காப்புப் பாடத்திட்டங்கள் அந்தத் திட்டத்தில் உள்ளன.

