உடலுறுதியை மேம்படுத்துவதற்காக மணிக்கணக்கில் நீந்தவும் குளிர்ந்த நீரில் பழக்கப்படுத்திக்கொள்ளவும் வாரந்தோறும் 17 டிகிரி செல்சியஸ் நீரில் இறங்கினார் டாக்டர் சுவா ஜியா லோங்.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் முதல்முறையாக இறங்கியபோது இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சிங்கப்பூர் குடியரசு கடற்படையைச் சேர்ந்த 32 வயது மருத்துவ அதிகாரியான இவர், “எனது தசைகள் எல்லாம் உடனே இறுகத் தொடங்கிவிட்டன,” என்றார்.
கடுங்குளிரான நீரிலும், 8 பிரிட்ஜஸ் ஹட்சன் ஆற்று நீச்சலை முடித்த முதல் சிங்கப்பூரரான டாக்டர் சுவா, ஏறத்தாழ ஏழு நாள்களாகப் பிரித்து, 44 மணி நேரத்தில் 192 கிலோமீட்டர் தூரம் இவர் நீந்தினார். இது, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கரையோரப் பகுதியின் நீளமாகும்.
இந்தச் சவாலை நிறைவேற்றிய உலகின் 24வது நபர் டாக்டர் சுவா.
உலகிலேயே ஆக நீண்ட நெடுந்தொலைவு நீச்சலான ‘ஹட்சன் ஆறு’ சவாலை நிறைவேற்றுவது டாக்டர் சுவாவின் கனவாக இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் இவரது நீச்சலில் அறக்கொடை அம்சமும் இடம்பெற்றது.
சிங்கப்பூரில் செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனைக்காக இவர் நிதி திரட்டுகிறார். 2021ல் அங்கு மருத்துவ அதிகாரியாக இவர் பணியாற்றி இருந்தார்.
$25,000 நிதி திரட்டு இலக்கைக் கடந்த பிறகு, புதிய இலக்கை $250,000ஆக டாக்டர் சுவா உயர்த்தினார். ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி, $68,000க்குமேல் நிதி திரட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திறந்தவெளி நீரில் நெடுந்தூரம் நீந்துவது இவருக்கு வசதியான அனுபவமாக இருந்தபோதிலும், 8 பிரிட்ஜஸ் நீச்சலில் ஈடுபடுவது டாக்டர் சுவாவுக்கு பெரும் சவாலான காரியமாக இருந்தது.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு தாய்லாந்தில் 10 கிலோமீட்டர் தூரம் இவர் நீந்தியதே ஆக நீண்ட தூரமாக இருந்தது.
8 பிரிட்ஜஸ் சவாலின் மொத்த தூரம் போதாததற்கு, ஜூன் 6ஆம் தேதி டாக்டர் சுவா நியூயார்க் சென்றடைந்தபோது அங்கு வானிலை மோசமாக இருந்தது. கனவாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் புகைமூட்டம் நிலவியது.
“போட்டி நடைபெற்ற நாள்களில் இடி மின்னல், மூடுபனி, ஆலங்கட்டி மழை போன்ற மோசமான வானிலை ஏற்பட்டது.
“சில தருணங்களில் காற்று மிகவும் வலுவாக வீசியது. அதுவும் நான் நீந்துவதற்கு எதிர்த்திசையில் காற்று வீசியதால் என் வேகம் குறைந்தது,” என்றார் டாக்டர் சுவா.
சூழல் சாதகமாக இல்லாதபோதிலும், சவால்களை எதிர்த்து இவர் போராடினார். போட்டி முழுவதும் இவரின் பாதுகாப்பை உறுதிசெய்து சரியான திசையில் வழிகாட்ட படகோட்டி ஒருவர் படகில் உடன் சென்றார்.
உடல்ரீதியாக டாக்டர் சுவா இப்போட்டிக்குத் தயாராக இருந்தார். இவர் மேற்கொண்ட கடினமான பயிற்சித் திட்டமே அதற்குக் காரணம்.
அன்றாடம் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து 5 கிலோமீட்டர் தூரம் வரை இவர் நீந்தினார். நாளின் பிற்பகுதியில் நீச்சல் குளத்தில் இவர் நீந்துவதும் உண்டு.
காலப்போக்கில் நீச்சல் அடிக்கும் தூரத்தையும் நேரத்தையும் இவர் படிப்படியாக அதிகரித்தார்.
டாக்டர் சுவாவின் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை இப்போட்டியின் இறுதிக்கட்டத்தை அவர் நிறைவுசெய்தார். சுதந்திர தேவி சிலையை இவர் கடந்து சென்றார்.
“அத்தகைய பெரியதொரு போட்டியை நிறைவுசெய்த பிறகு, எங்களுக்குச் சான்றிதழ் மட்டுமே கிடைத்தது. ஆனால், எனக்கு அது அர்த்தமுள்ள ஒரு விஷயம்,” என்றார் டாக்டர் சுவா.
நியூயார்க்கில் இவருக்குக் கிடைத்த வெற்றி, இதுபோன்ற நீச்சலில் மேலும் ஈடுபட உத்வேகம் தருகிறது.
“இப்போட்டி என் மனஉறுதியை வலுப்படுத்தியுள்ளது. என்னால் என்ன சாதிக்க முடியும் என்பதை இது காட்டியுள்ளது,” என்றார் டாக்டர் சுவா.


