விற்பனைக்கு வரும் கிச்சனர் சாலை பார்க்ராயல் ஹோட்டல்

விற்பனைக்கு வரும் கிச்சனர் சாலை பார்க்ராயல் ஹோட்டல்

2 mins read
38f7a21a-4e63-414a-852e-7befcecc4f34
கிச்சனர் சாலையில் இருக்கும் பார்க்ராயல் ஹோட்டல். - படம்: பார்க்ராயல் கிச்சனர் ஹோட்டல் / ஃபேஸ்புக்

தேக்கா வட்டாரத்தில் முஸ்தஃபா கடைத்தொகுதிக்கு அருகே இருக்கும் பார்க்ராயல் கிச்சனர் ஹோட்டலை யூஓஎல் நிறுவனம் 525 மில்லியன் வெள்ளிக்கு விற்கவுள்ளது.

யூஓஎல் குழுமத்துக்குச் சொந்தமான பான் பசிபிக் ஹோட்டல்கள் குழுமம் (பிபிஹெச்ஜி) இந்த ஹோட்டலை மிட்டவுன் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் விற்கப்போகிறது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் பரிவர்த்தனை முழுமையாக மேற்கொள்ளப்படும்.

இதன்படி பார்க்ராயல் கிச்சனர் ஹோட்டல் நிறுவனத்தின் (பிகேஹெச்) அனைத்து ஐந்து மில்லியன் பங்குகளும் கைமாறும். கிச்சனர் சாலையில் இருக்கும் பார்க்ராயல் ஹோட்டல், நியூ பார்க் ஆர்க்கேட் கடைத்தொகுதி ஆகியவை பிகேஹெச்சுக்குச் சொந்தமானவை.

கிச்சனர் சாலையில் உள்ள பார்க்ராயல் கிச்சனர் ஹோட்டலில் 542 அறைகள் இருக்கின்றன.

பிகேஹெச் சொத்துகளின் மதிப்பு 423 மில்லியன் வெள்ளி என்று 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கணக்கிடப்பட்டது. அதைக் கருத்தில்கொண்டே விற்பனை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்ராயல் கிச்சனர் ஹோட்டலை விற்பதால் யூஓஎல் நிறுவனம் 446.2 மில்லியன் வெள்ளி பெறும் என்று சிட்டிபேங்க் வங்கியின் முதலீட்டு ஆய்வுப் பிரிவு தெரிவித்தது.

தனது சொத்துகளை மறுசீரமைக்கும் முயற்சியில் யூஓஎல் குழுமம் ஈடுபட்டுள்ளது. கிச்சனர் சாலை பார்க்ராயல் ஹோட்டலின் விற்பனை அதில் அடங்கும் என்று அது கூறியது.

விற்பனையில் வரும் தொகை யூஓஎல் குழுமத்தின் செயல்பாடுகளுக்கும் அதன் வங்கிக் கடன்களை அடைப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

இந்தப் பரிவர்த்தனையின் தொடர்பில் ஜேஎல்எல் எனும் சொத்து நிறுவனம் பிபிஹெச்ஜிக்கு ஆலோசனை வழங்கியிருந்தது. பார்க்ராயல் கிச்சனர் ஹோட்டல், சிங்கப்பூரில் ஒரு பெரிய சொத்தாக வாங்கப்படும் ஆகப் பெரிய ஹோட்டல் என்று ஜேஎல்எல் குறிப்பிட்டது. 2023ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இதுவே ஒரு பெரிய சொத்தாக வாங்கப்படும் இரண்டாவது ஆகப் பெரிய ஹோட்டல் என்றும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்