சிங்கப்பூர் நடனக் கலைஞர் ரதி கார்த்திகேசு காலமானார்

2 mins read
b0b79eb0-88eb-4da5-a11b-825c84e7314a
சிங்கப்பூர் நடனக் கலைஞர் திருவாட்டி ரதி கார்த்திகேசு ஆகஸ்ட் 7ஆம் தேதி கால­மா­னார். - படம்: ஃபேஸ்புக்

சிங்கப்பூர் நடனக் கலைஞர் திருவாட்டி ரதி கார்த்திகேசு ஆகஸ்ட் 7ஆம் தேதி கால­மா­னார். அவ­ருக்கு வயது 87. அவ­ரது உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி மண்டாய் தகனச்சாலையில் தகனம் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் இந்திய பாரம்பரியத்திற்கும் மரபுடைமைக்கும் பல வழிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வந்த இவர் அண்மையில் முதுகில் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

இவருடைய மறைவு சிங்கப்பூர் கலை உலகிற்கே ஒரு மாபெரும் இழப்பு என்று கூறினார் ஜோதி புஷ்பக்கடையின் உரிமையாளர் திரு ராஜ்குமார் சந்திரா, 65. முதன்முதலில் தன்னுடைய 15 வயதில் திருவாட்டி ரதியை வாடிக்கையாளராக சந்தித்ததை நினைவுகூர்ந்த இவர், அவரை தன் தாயாகவே கருதியதாக மனம் உருகக் கூறினார்.

திருவாட்டி ரதியின் வீடே ஒரு அருங்காட்சியகம் போல காட்சியளிக்கும் என்று குறிப்பிட்ட இவர், சிங்கப்பூரின் ஆசிய நாகரிக அரும்பொருளகத்திற்கும் இந்திய மரபுடைமை நிலையத்திற்கும் பல்வேறு கலாசார பொக்கிஷங்களை ரதி நன்கொடையாக வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

திருவாட்டி ரதியின் மறைவு குறித்து அப்சரஸ் ஆர்ட்ஸ் கலை நிறுவனத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி, 56, “மூத்த கலைஞரான இவர் பல்வேறு இந்திய பாரம்பரியக் கலைகளைக் கற்றுத்தேர்ந்தவர். குறிப்பாக பரதநாட்டியத்திலும் குச்சுபுடி நடனத்திலும் கோலேச்சிய இவர் சிங்கப்பூர் மட்டுமல்லாது உலகளவில் பல நாடுகளில் தன்னுடைய திறமைகளை படைத்துள்ளார்,” என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரின் கலை வளர்ச்சி வரலாற்றில் என்றென்றும் இவருடைய பெயரும் அடையாளமும் நிலைத்திருக்கும் என்றும் இவர் கூறினார்.

திருவாட்டி ரதி சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“1950களில் சிஃபாஸ் நடனத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வலுப்படுத்தி தரம் உயர்த்தியதில் திருவாட்டி ரதியின் பங்கு அலாதியானது,” என்று கூறினார் சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தின் செயலாளர் திரு பி.எஸ். சோமசேகரன், 70.

பரதநாட்டியம் மட்டுமல்லாது பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் கைத்தேர்ந்தவர் திருவாட்டி ரதி என்றும் திரு சோமசேகரன் மேலும் குறிப்பிட்டார்.

திருத்தக் குறிப்பு: 10 ஆகஸ்ட் 2023 தேதியில் வெளிவந்த தமிழ்முரசு அச்சுப்பிரதி பக்கம் ஐந்தில், திருவாட்டி ரதி கார்த்திகேசு கலாசாரப் பதக்கம் பெற்றவர் என்றும் அவர் அப்சரஸ் ஆர்ட்ஸ் கலை நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டது. இவை தவறு. உண்மையில் அவர் கலாசாரப் பதக்கத்தைப் பெறவில்லை. அவர் சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தவர். பிழைக்கு மன்னிக்கவும்.

குறிப்புச் சொற்கள்