வீட்டு வாடகை ஜூலையில் தொடர்ந்து ஏற்றம்

வீட்டு வாடகை ஜூலையில் தொடர்ந்து ஏற்றம்

2 mins read
1148c234-1285-4fd6-9ee7-ac2a67e5160e
லிட்டில் இந்தியா, ஜாலான் புசார் வீவக வீடுகள் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் வாடகை, தொடர்ந்து 37வது மாதமாக ஜூலையில் ஏற்றம் கண்டுள்ளது. ஜூன் மாதத்தின் 1.4 விழுக்காடு உயர்வுக்குப் பிறகு, ஜூலை மாதத்தில் வாடகை 2 விழுக்காடு கூடியது.

மொத்தத்தில், 2022 ஜூலைக்கும் 2023 ஜூலைக்கும் இடையில், வீவக வீடுகளின் வாடகை 24.1 விழுக்காடு அதிகரித்திருப்பதாக 99.கோ நிலச்சொத்து இணையத்தளமும் சிங்கப்பூர் நிலச்சொத்து பங்குச்சந்தையும் புதன்கிழமை வெளியிட்ட முன்னோட்டப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதற்கிடையே, கொண்டோமினியம் கூட்டுரிமை வீடுகளின் வாடகை தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஜூலையில் 1.1 விழுக்காடு கூடியது.

ஜூன் மாத உயர்வு 0.2 விழுக்காடு. ஓராண்டில், வாடகை 21.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையும் ஜூலையில் கூடியிருக்கிறது.

ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலையில் 11 விழுக்காடு அதிக வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

ஜூலையில் சுமார் 3,320 வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இது ஜூன் மாத 2,990 வீடுகளைவிட அதிகம்.

வாடகைக்கு விடப்பட்ட கொண்டோமினியம் வீடுகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தைவிட ஜூலையில் 25.3 விழுக்காடு அதிகமாக இருந்தது.

ஜூலையில் 7,283 கொண்டோமினியம் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் வாடகைச் சந்தை சூடுபிடிக்கும் என ஆய்வாளர்கள் செய்திருந்த கணிப்புக்கு ஏற்ப புள்ளிவிவரங்களும் ஏற்றம் கண்டுள்ளன.

வீவக வீடுகளுக்கும் கொண்டோமினியம் வீடுகளுக்கும் இடையிலான வாடகை வித்தியாசத்தை வீட்டுரிமையாளர்கள் பயன்படுத்திக்கொண்டதால் வீவக வீடுகளின் வாடகை உயர்ந்திருப்பதாக 99.கோ நிறுவனத்தைச் சேர்ந்த திரு லுக்மான் கருதுகிறார்.

அதனால்தான் வீவக எக்சிகியூட்டிவ் வீடுகளின் வாடகை 4 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. மூன்று அறை வீடுகளின் வாடகை 1.4 விழுக்காடும், நான்கு அறை வீடுகளின் வாடகை 2.4 விழுக்காடும், ஐந்து அறை வீடுகளின் வஆடகை 1.9 விழுக்காடும் மட்டுமே அதிகரித்துள்ளன.

கொண்டோமினியம் வீடுகளை வாடகைக்கு எடுக்க நினைத்த சிலர், குறைவான வாடகையுள்ள எக்சிகியூட்டிவ் வீடுகளுக்கு மாறியதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதி செய்வதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்