பிளாஸ்டிக் மறுசுழற்சிக்குப் புதிய வழி; ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் மறுசுழற்சிக்குப் புதிய வழி; ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

2 mins read
29306e86-3288-4e72-98a2-5af8c5d2c072
புதிய நடைமுறையை உருவாக்கி இருக்கும் குழுவிற்கு தலைமை ஏற்றுள்ள இணைப் பேராசிரியர் சூ ஹான் சென், கரைந்த பிளாஸ்டிக்கையும் கிரியாவூக்கிப் பொருளையும் கொண்ட ஒரு திரவ போத்தலைக் காட்டி விளக்குகிறார். - படம்: என்டியு 

பிளாஸ்டிக் பொருள்களை, சுற்றுச்சூழலுக்கு அவ்வளவாக ஆபத்து இல்லாத வகையில் மறுசுழற்சிக்கு உட்படுத்துவதற்கான ஒரு புதிய வழியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆய்வாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய வழியின்படி பிளாஸ்டிக் பைகள், மெத்துப் (ஸ்டைரோஃபோம்) பெட்டிகள், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பெட்டிகள், பிவிசி கழிவுநீர்க் குழாய்களைக்கூட வேதியியல் முறையில் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும்.

இந்த முறை மூலம் சுற்றுச்சூழலில் கலக்கக்கூடிய கரிமக்கழிவின் அளவு மிகக் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கும் நடைமுறை, பிளாஸ்டிக் பொருள்களின் கடுமையான மூலக்கூறுகளை உடைக்கக்கூடிய வேதிவினைகளை வேகப்படுத்தக்கூடிய ஒரு வர்த்தக வினையூக்கிப் பொருளையும் ஒளியையும் பயன்படுத்துகிறது.

அந்த நடைமுறையின்போது உருவாகக்கூடிய அமிலங்களைக் கொண்டு ஹைட்ரஜன் போன்ற பசுமை எரிபொருளைத் தயாரிக்க பயன்படுத்த முடியும்.

இந்தப் புதிய திட்டத்திற்கு இணைப் பேராசிரியர் சூ ஹான் சென் தலைமை வகிக்கிறார்.

அவர் இந்த நடைமுறையை மறுசுழற்சிக்குப் பதில் ‘மேல் சுழற்சி’ என்று வர்ணித்தார்.

மறுசுழற்சி என்பது இயந்திரபூர்வ மறுசுழற்சியைக் குறிப்பிடுவதாகவே இப்போது இருந்து வருகிறது. இந்த முறைப்படி பிளாஸ்டிக்கின் பயன்பாட்டுக் காலம் குறைக்கப்படுகிறது.

இயந்திரபூர்வ மறுசுழற்சி என்பது கழிவுப்பொருள்களை வகைப்படுத்தி, பிரித்தெடுத்து, அவற்றைக் கழுவி சுத்தப்படுத்தி, வேதிப்பொருள்களைச் சேர்த்து அரைத்து மீண்டும் வடிவம் கொடுப்பதாகும்.

ஆனால், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்து இருக்கும் தொழில்நுட்பம் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது.

இதன்படி, மின்கலங்களிலும் திரவக் கரிம ஹைட்ரஜன் கடத்திகளிலும் பயன்படுத்தக்கூடிய இதர வேதிப்பொருள்களைத் தயாரிக்க ஏதுவாக ஃபார்மிக் அமிலம், அசிட்டிக் அமிலம், பென்சாயிக் அமிலம் ஆகியவற்றைத் தயாரிக்க முடியும்.

ஹைட்ரஜன் என்பது வாயு நிலையில் அரிதாகவே காணப்படும். திரவக் கரிம ஹைட்ரஜன் கடத்திகளால் ஹைட்ரஜனை உறிஞ்சிக்கொள்ள முடியும்.

இதன்மூலம் போக்குவரத்து பாதுகாப்புமிக்கதாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் அவ்வளவாக பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வுக் குழு தங்களுடைய தொழில்நுட்பத்தை வணிக நோக்கில் காசாக்க தொழில்துறை நிறுவனங்களை நாடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்