அக்டோபர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் பெரும்பாலான நாள்கள் காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் தென்கிழக்குப் பருவ மழை காரணமாக இங்கு மழை பெய்வதோடு தென்கிழக்கு அல்லது தென்மேற்கிலிருந்து குறைந்த அழுத்த காற்றும் வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.
இரு வாரங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றாலும் ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.
அதேபோல, ஒன்று அல்லது இரண்டு நாள்கள் பிற்பகல் வேளையில் மிதமான அல்லது கடுமையான மழையும் பெய்யலாம்.
மொத்தமாக, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் பெய்யக்கூடிய மழையின் அளவு சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

