2022 டிசம்பருக்குப் பிறகு அடிமட்டத்தைத் தொட்ட தனியார் வீட்டு விற்பனை

2022 டிசம்பருக்குப் பிறகு அடிமட்டத்தைத் தொட்ட தனியார் வீட்டு விற்பனை

2 mins read
80388b46-f0bb-4a74-90d4-dc6b62388bf2
மாதாந்திர அடிப்படையில் 44.9 விழுக்காடும் ஆண்டு அடிப்படையில் 78 விழுக்காடும் புதிய தனியார் வீடுகளின் விற்பனை சரிந்தது. - படம்: எஸ்பிஎச்

புதிய தனியார் வீடுகளின் மாதாந்திர விற்பனை 2022 டிசம்பருக்குப் பிறகு அடிமட்டத்தைத் தொட்டுள்ளது.

திங்கட்கிழமை நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட செப்டம்பர் மாதத்திற்கான தரவில் இந்த விவரம் இடம்பெற்று உள்ளது.

எக்சிகியூட்டிவ் கொன்டோமினிய வீடுகளைக் தவிர்த்து 217 புதிய தனியார் வீடுகள் செப்டம்பர் மாதம் விற்பனை ஆயின.

இது அதற்கு முந்திய மாதத்தைக் காட்டிலும் 44.9 விழுக்காடு சரிவு.

ஆகஸ்ட் மாதம் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 394.

ஆண்டு அடிப்படையில் விற்பனை 78 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. 2022 செப்டம்பர் மாதம் 987 தனியார் வீடுகள் விற்பனை ஆயின.

இதற்கு முன்னர் ஆகக் குறைவான விற்பனை பதிவானது 2022 டிசம்பர் மாதத்தில்தான். அப்போது 170 வீடுகள் மட்டுமே விற்பனை ஆயின.

தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டதற்கு அந்த இரு மாதங்களிலும் பெரிய அளவிலான புதிய வீட்டு விற்பனை தொடங்கப்படாதது காரணமாக இருக்கலாம் என்று சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்கள் கூறினர்.

ஜூலை மாதம் 2,156 புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்பட்ட நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அந்த எண்ணிக்கை குறைந்தது.

ஆகஸ்ட் மாதம் 590 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்ட அதேநேரம் செப்டம்பரில் ஆகக் குறைவாக 68 வீடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.

கடந்த சில மாதங்களில் புதிய வீடுகளுக்கான விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மேம்பாட்டாளர்களிடம் இந்த இரு மாதங்கள் சுணக்கம் காணப்பட்டதாக எட்மண்ட் டை சொத்து நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவு தலைவர் லாம் செர்ன் வூன் தெரிவித்தார்.

மேலும் சந்தையில் பலதரப்பட்ட தெரிவுகள் தற்போது இருப்பதால் வீடு வாங்குவோரின் தேர்ந்தெடுப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம் என்றார் அவர்.

ஆரஞ்சுடீ அண்ட் டை நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டின் சன் கூறுகையில், வழக்கமாக, செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடையும் சீனர்களின் சந்திரமுறை ஏழாவது மாதம் எனப்படும் ஹங்ரி கோஸ்ட் மாதத்தில் வீடமைப்புச் சந்தை அமைதியாகக் காணப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்