கலை, வடிவமைப்பு, ஊடகப் பட்டதாரிகளின் சம்பளம் உயர்ந்தது

கலை, வடிவமைப்பு, ஊடகப் பட்டதாரிகளின் சம்பளம் உயர்ந்தது

1 mins read
2ffcd0af-418c-41bf-b7a8-f5d739ebe369
கடந்த 10 ஆண்டுகளில் கல்வி, வடிவமைப்பு மற்றும் ஊடகப் பட்டதாரிகளின் தொடக்கச் சம்பளம் ஆண்டுக்கு 3.4% அதிகரித்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொறியியல், கட்டட சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தகத் துறைகளில் வேலை செய்வோரைக் காட்டிலும் கலை, வடிவமைப்பு மற்றும் ஊடகப் படிப்புகளை (ஏடிஎம்) முடித்த இளநிலைப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதமும் தொடக்க ஊதியமும் குறைவு என்று கல்வி துணை அமைச்சர் கான் சியோவ் ஹுவாங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒவ்வொரு துறையும் சம்பந்தப்பட்ட பொருளியல் தேவை மற்றும் சந்தை நிலவரத்தை இது பிரதிபலிப்பதாக அவர் புதன்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் அத்தகைய பட்டதாரிகளுக்கான சராசரி வேலைவாய்ப்பு விகிதம் 88 விழுக்காடாக இருந்தது என்றும் ஒவ்வோர் ஆண்டும் அவர்களின் தொடக்கச் சம்பளம் 3.4 விழுக்காடு உயர்ந்தது என்றும் திருவாட்டி கான் குறிப்பிட்டார்.

கலை, வடிவமைப்பு மற்றும் ஊடகப் பட்டதாரிகளுக்கும் சுகாதார அறிவியல் பட்டதாரிகளுக்கும் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவதன் காரணத்தைக் கண்டறியும் திட்டம் எதுவும் கல்வி அமைச்சிடம் உள்ளதா என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் சீ எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் இந்த விவரங்களை அவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி வேலைவாய்ப்பு பற்றிய ஆய்வைச் சுட்டிக்காட்டி அவர் அந்த வினாவை எழுப்பி இருந்தார்.

2023ஆம் ஆண்டு நிலவரத்தைச் சுட்டிக்காட்டிய அந்த ஆய்வு, இதர பாடங்களின் பட்டதாரிகளைக் காட்டிலும் கலை, வடிவமைப்பு மற்றும் ஊடகப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம் ஆகக் குறைவாக இருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்