‘கொவிட்-19 பணிக்குழுவின் சிறந்த செயல்பாடு: சானின் பங்களிப்பு இன்றியமையாதது’

1 mins read
6831ab79-e4b6-4e8c-9e0e-f872b176091f
திரு சான் யெங் கிட் ஜூலை 15ஆம் தேதி சுகாதார அமைச்சின் பொறுப்புகளிலிருந்து விலகி, எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொள்வார். - படம்: எஸ்பிஎஸ் மீடியா

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட, அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு சிறப்பாகச் செயல்பட்டதற்கு சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட்டின் திறன்வாய்ந்த தலைமைத்துவம் முக்கியக் காரணம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

திரு சான் தமது நெருங்கிய சக ஊழியர் என்று ஏப்ரல் 8ஆம் தேதி வெளியான தமது சமூக ஊடகப் பதிவுகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரு சான், 59, தற்காப்பு அமைச்சிலிருந்து 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சுகாதார அமைச்சில் சேர்ந்ததாகக் கூறிய அமைச்சர், அது சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னதாக என்பதைச் சுட்டினார்.

“யெங் கிட் சில முறை தாம் சுகாதார அமைச்சுக்கு துரதிர்ஷ்டமானவர் என்று கூறிக்கொண்டதுண்டு. ஆனால் அவரது நியமனம் அறிவார்ந்த செயல் என்றும் மிகவும் தேவையான காலகட்டத்தில் அவர் சுகாதார அமைச்சிற்கு வந்ததாகவும் நான் கருதுகிறேன்,” என்றார் திரு ஓங்.

“திரு சான் அமைதியாகப் பின்னணியில் அதிகம் பங்களித்துள்ளார். கிருமிப் பரவல் நிலைமையைப் புரிந்துகொள்வதற்கான திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல், தரவுச் சேகரிப்பு உட்படப் பல அம்சங்களில் கடினமாக உழைத்த அவர் அதுபற்றி அதிகம் பேசியதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு இல்லாமல், அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் செயல்பாடு சாத்தியமாகியிருக்காது,” என்று அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்