சிங்கப்பூரின் உற்பத்தித்துறை வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் மார்ச் மாதத்தில் 9.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கு முன்பு இரண்டு மாதங்கள் உற்பத்தி சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறியிருப்பது பொருளியல் ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பொதுவாக மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும் உயிர்மருத்துவ தொழிற்துறையைத் தவிர்த்துப் பார்த்தால் உற்பத்தித் துறை வளர்ச்சி 5.9 விழுக்காடு குறைந்திருப்பதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாத அடிப்படையில் மார்ச் மாதத்தில் உற்பத்தித்துறை வளர்ச்சி 16 விழுக்காடு சரிந்தது. உயிர்மருத்துவ தயாரிப்புத் துறை நீங்கலாக உற்பத்தித்துறை வளர்ச்சி 8.7 விழுக்காடு குறைந்தது.
ஆண்டு அடிப்படையில் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட 9.2 விழுக்காட்டுச் சரிவு, புளூம்பெர்க் ஆய்வில் பகுப்பாய்வாளர்கள் கணித்திருந்த 1.5 விழுக்காட்டைவிட மோசமானது.
ஆறு துறைகளில் உயிர்மருத்துவ உற்பத்தித்துறை வளர்ச்சி மட்டும் ஆக அதிகமாக 34.3 விழுக்காடு சரிவு ஏற்பட்டது. இது, மருந்து உற்பத்தியை பாதியாகக் குறைக்கப்பட்டதனால் நிகழ்ந்துள்ளது.
மருந்து உற்பத்தி மட்டும் 54.1 விழுக்காடு சரிந்தது என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் குறிப்பிட்டது.
ஒரு வருடத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளைவிட தற்போது அவற்றின் கலவை மாறியிருப்பது இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
ரசாயனத் துறை 4.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. துல்லிய பொருளியல் துறை ஒராண்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் 3.2 விழுக்காடு விரிவடைந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு துறைகளின் வளர்ச்சி, இதர நான்கு துறைகளின் சரிவை ஈடுகட்ட போதுமானது அல்ல.
தகவல்தொடர்பு, வாடிக்கையாளர் மின்னணு துறை ஆகியவை 18.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்தாலும் மின்னணு உற்பத்தித்துறை வளர்ச்சி 11.3 விழுக்காடு குறைந்தது. பகுதி மின்கடத்தி தொழில்துறையில் 14.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும்.
போக்குவரத்து பொறியியல் உற்பத்தி ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.7 விழுக்காடு குறைந்தது.