தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயின் முகத்தில் குத்திவிட்டு கத்தியுடன் காவல்துறை அதிகாரியை நோக்கிப் பாய்ந்த ஆடவருக்குச் சிறை

2 mins read
bcad3c9a-e48f-4923-8f7c-bb3dd3f9ce8f
25 வயது பிரவீன் புலேந்திரதாசுக்கு ஐந்து மாதங்கள், எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: இணையம்

குடிபோதையில் தாயின் முகத்தில் குத்தியதற்காகவும் கத்தியுடன் காவல்துறை அதிகாரியை நோக்கிப் பாய்ந்ததற்காகவும் 25 வயது பிரவீன் புலேந்திரதாசுக்கு ஐந்து மாதங்கள், எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காயம் விளைவித்ததாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிரவீன் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்பட்டபோது துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்த நாளன்று மனவுளைச்சல் காரணமாக மதுபானம் அருந்தியதாகவும் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்றும் பிரவீன் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார்.

தண்டனையை நிறைவேற்றிய பிறகு மீண்டும் மது அருந்திவிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பிரவீனிடம் நீதிபதி கெஸ்லர் சோ கூறினார்.

பிப்ரவரி 14ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பிரவீனின் 23 வயதுத் தங்கையும் 58 வயதுத் தாயாரும் தங்கள் படுக்கையறையில் இருந்தனர்.

10 மணி அளவில் வரவேற்பு அறையில் பிரவீன் சத்தம் போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடிபோதையில் இருந்த பிரவீன் படுக்கையறையின் கதவை மூர்க்கத்தனமாகத் திறந்து தங்கையிடம் எகிறினார்.

பிறகு தமது தாயாரை வசை பாடினார்.

இதற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.

மகளைப் பாதுகாக்க பிரவீனின் தாயார் முயன்றபோது அவரது இடது கன்னத்தில் பிரவீன் குத்தினார்.

பிரவீனை அறையிலிருந்து வெளியே தள்ளிவிட்டு கதவைப் பூட்டிய அவரது தங்கை, காவல்துறையை அழைத்தார்.

இரவு 10.40 மணி அளவில் காவல்துறை அதிகாரிகள் இருவர் அந்த வீட்டை அடைந்தபோது கதவு திறந்திருந்ததைக் கண்டனர். பிரவீன் வரவேற்பு அறையில் தனியாக அமர்ந்துகொண்டிருந்தார்.

படுக்கையறையில் இருந்த இரு பெண்களையும் பார்க்க அதிகாரி ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார்.

பிரவீனை அவர் கடந்து சென்றபோது, பிரவீன் திடீரென்று எழுந்ததாகவும் அவர் கையில் கத்தி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பார்த்த அதிகாரி, பிரவீன் தம்மை நெருங்காதிருக்க அவரைத் தள்ளிவிட்டார்.

ஆனால், தம்மை நோக்கிக் கத்தியுடன் வந்த பிரவீனை அந்த அதிகாரி டேசர் துப்பாக்கியைப் பயன்படுத்திச் சுட்டார். ஆனால் தமது உடலில் பாய்ந்த டேசர் மின் கருவிகளைப் பிடுங்கி எறிந்த பிரவீன், அதிகாரியை நோக்கி ஓடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மற்றொரு காவல்துறை அதிகாரி பிரவீனை நோக்கி டேசர் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, பிரவீன் தரையில் விழுந்தார்.

குறிப்புச் சொற்கள்