தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து வயது மகளைக் கொன்ற ஆடவருக்கு 34½ ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி

2 mins read
7b856eb2-de8e-4588-b6b0-cc85b266b549
2016 அக்டோபர் முதல் 2017 ஆகஸ்ட் வரை ஆயிஷாவும் அவருடைய சகோதரரும் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டனர். சாப்பாட்டுக்காக அல்லது அந்த ஆடவரும் அவருடைய மனைவியும் கழிவறையைப் பயன்படுத்தும்போது மட்டுமே பிள்ளைகள் வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். - படம்: நீதிமன்ற ஆவணங்கள்

பெற்ற இரு பிள்ளைகளைக் குத்துச்சண்டைப் பயிற்சிப் பையைக் குத்துவதுபோல் குத்தி, அவர்களில் 5 வயது மகளைக் கொன்ற 44 வயது தந்தைக்கு, செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 30) 34½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

குழந்தைகளைத் துன்புறுத்தியதற்காக நான்கு குற்றச்சாட்டுகளும் தடயங்களை மறைத்ததற்காக ஒரு குற்றச்சாட்டும் சிறுமியைக் கொலை செய்ததற்காக ஒரு குற்றச்சாட்டும் அந்த ஆடவர்மீது சுமத்தப்பட்டன.

தன்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்படுமுன் அவர் மீதான மற்ற 20 குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.

கொலை செய்யப்பட்ட சிறுமி உட்பட பாதிக்கப்பட்ட இருவரும் குற்றவாளியின் முதல் திருமண உறவின் மூலம் பிறந்த பிள்ளைகள். 2015 ஆம் ஆண்டு 33 வயது மதிக்கத்தக்க பெண்ணை இரண்டாவதாகக் குற்றவாளி மணந்தார். அவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

குற்றவாளியின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை மறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

சமூகம், உயிரிழந்த சிறுமியை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக உயிரிழந்த சிறுமியின் பெயரை மட்டும் வெளியிட நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிக்கு வரலாறு காணாத தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

கொலையான ஐந்து வயது சிறுமியின் பெயர் ஆயிஷா. தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்ற அவளின் தந்தை, இடைவிடாமல் அவளது தலையில் குத்தியதால் பலத்த காயமடைந்து, வீட்டின் கழிவறையிலேயே அவள் உயிரிழந்தாள்.

இச்சம்பவம் 2017ஆம் ஆண்டு நடந்தது. ஆயிஷாவும் அவளது இளைய சகோதரரும் 2015ஆம் ஆண்டு முதல் அவர்களின் தந்தையால் துன்புறுத்தப்பட்டனர். அவளின் உடலில் பல வடுக்கள், காயங்கள் இருந்தன. மேலும், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் அவள் பாதிக்கப்பட்டிருந்தாள்.

குழந்தைகளுக்கு உணவளிக்காமல் அக்கொடூரத் தந்தை அவர்களைக் கொடுமைப்படுத்தினார். பசிக் கொடுமையால் அக்குழந்தைகள் மலத்தையும் மெத்தையில் இருந்த திணிப்புகளையும் உட்கொண்டதாகக் கூறப்பட்டது.

மேலும், அவர்கள் 10 மாதங்களாகக் கழிவறையில் ஆடையின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொலையான சிறுமியின் சகோதரர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகு, குழந்தைப் பராமரிப்பு நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்