பிரதமர் லீ: எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்

2 mins read
8d88678d-0c37-4906-8ee8-67990a6ac31f
மே தினக் கூட்டத்தில் (இடமிருந்து வலம்) என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், பிரதமர் லீ சியன் லூங், என்டியுசி தலைவர் கே. தனலட்சுமி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

1952ஆம் ஆண்டில் அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ, அவர்களது தொழிற்சங்கத்தைப் பிரதிநிதித்து தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

அக்காலகட்டத்தில்தான் அவரது மகனும் சிங்கப்பூரின் தற்போதைய பிரதமருமான திரு லீ சியன் லூங் பிறந்தார்.

“என்னையும் எனது தாயாரையும் பார்க்க கேகே மருத்துவமனைக்கு எனது தந்தை வந்தபோது, என்னைப் பார்த்து கொஞ்சுவதை விட்டுவிட்டு அஞ்சல் ஊழியர்களின் தொழிற்சங்கத்தைப் பற்றியும் தமது திட்டத்தைப் பற்றியும் எனது தாயாரிடம் பேசினார்,” என்று மே 1ஆம் தேதியன்று நடைபெற்ற மே தினப் பேரணி உரையின்போது பிரதமர் லீ நினைவுகூர்ந்தார்.

தமது வாழ்விலும் சிங்கப்பூரின் வெற்றிக்கும் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு அதிகம் என்றார் அவர்.

“சிறுவனாக இருந்தபோது பல தொழிற்சங்கவாதிகளைச் சந்தித்தேன். அவர்கள் எங்கள் வீட்டில் நடத்தப்பட்ட கூட்டங்களில் கலந்துகொள்ள வந்தனர். பல வர்த்தகத் தொழிற்சங்கங்களுக்கு எனது தந்தை சட்ட ஆலோசகராக இருந்தார். சட்ட ஆலோசகர் என்றால் என்ன என்று எனக்கு அப்போது தெரியாது. இருந்தாலும், எனக்குப் பெருமையாக இருந்தது.

“புவிசார்ந்த அரசியல் மற்றும் பொருளியல் நிலையற்ற தன்மையை எதிர்கொள்கிறோம். இந்நிலையில், எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்,” என்றார் பிரதமர் லீ.

நெருக்கடிநிலை மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும் முத்தரப்புப் பங்காளித்துவம் மிகவும் முக்கியம் என்றார் அவர். முதலாளிகள், தொழிற்சங்கங்கள், அரசாங்கம் ஆகியவை இணைந்து செயல்படுவதே முத்தரப்புப் பங்காளித்துவம்.

முத்தரப்புப் பங்காளித்துவம் மட்டும் இருந்திருக்காவிடில், சிங்கப்பூரின் வளர்ச்சி, வெற்றி சாத்தியமாகி இருக்காது என்று திரு லீ தெரிவித்தார்.

மக்கள் செயல் கட்சி கடுமையாக உழைத்ததாகவும் அதன் விளைவாக சிங்கப்பூர் செழிப்புடன் இருப்பதாகவும் பேரளவில் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பலன்கள் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மக்கள் செயல் கட்சி கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருவதாகப் பிரதமர் லீ கூறினார்.

“மக்கள் செயல் கட்சிக்கும் தேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கும் (என்டியுசி) இடையிலான வலுவான உறவு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியுள்ளது,” என்றார் பிரதமர் லீ.

குறிப்புச் சொற்கள்