அரசாங்கச் செயல்திறனுக்கான உலகத் தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தரவரிசையில் சிங்கப்பூர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.
உலகெங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசாங்கத்தின் செயல்திறனை இந்த சாண்டிலர் குட் அரசாங்கக் குறியீட்டுத் தரவரிசை கண்காணித்து வரிசைப்படுத்துகிறது.
இந்தக் குறியீட்டை லாப நோக்கமற்ற சாண்டிலர் ஆட்சிமுறைக் கழகம் தொகுத்து வழங்குகிறது.
நான்காவது முறையாக இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
மே 15ல் வெளியிடப்பட்ட தரவரிசையில் டென்மார்க் இரண்டாவது இடத்திலும் ஃபின்லாந்து மூன்றாவது இடத்திலும், சுவிட்சர்லாந்து நான்காவது இடத்திலும் நார்வே ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
தரவரிசையில் முதல் 20 இடங்களில் இரண்டு ஆசிய நாடுகள் மட்டுமே உள்ளன.
சிங்கப்பூர் முதலிடத்திலும் தென்கொரியா 20வது இடத்திலும் உள்ளன.
தரவரிசையை நிர்ணயிக்க ஏழு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை, வலிமையான அமைச்சு மற்றும் அரசுத் துறைகள், வேலை உருவாக்கம், புத்தாக்கம் போன்ற பிறரைக் கவரும் தன்மை ஆகிய மூன்று அம்சங்களில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
நிதி மேற்பார்வைப் பிரிவில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அரசு நிதியை அரசாங்கம் எவ்வாறு பெறுகிறது, ஒதுக்குகிறது, விநியோகிக்கிறது என்பதை இந்தப் பிரிவு காட்டுகிறது.
குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பிரிவில் சிங்கப்பூர் நான்காவது இடம் வகிக்கிறது.
வலுவான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் பிரிவில் சிங்கப்பூர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.
உலகளாவிய செல்வாக்கு மற்றும் நற்பெயர் பிரிவில் சிங்கப்பூர் 26வது இடத்தில் உள்ளது.

