சட்டவிரோத குதிரைப் பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 113 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஏப்ரல் 27ஆம் தேதிக்கும் மே 11ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தீவு முழுவதும் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 113 பேர் கைதாயினர். இவர்களில் 103 பேர் ஆடவர்கள் என்றும் 10 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 90 வயது ஆடவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
காவல்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் சிங்கப்பூரின் ஏழு காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தெம்பனிஸ், ஈசூன், ஜூரோங் வெஸ்ட் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ரொக்கப் பணம் $60,000க்கும் மேல், கைப்பேசிகள், குதிரைப் பந்தய சூதாட்டத்துக்கு உதவும் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்த ஆரம்பகட்ட விசாரணையில் சட்டவிரோதப் பந்தயப் பிடிப்பாளர்கள், உதவியாளர்கள் என 113 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளதாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
இவர்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் $10,000 வெள்ளிவரை அபராதம், அல்லது ஆறு மாத சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.