தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அழைக்கும் தொலைவில் மன உளைச்சலுக்கு உதவி’

2 mins read
611769bb-0db6-4e19-9b48-e5eb4e9dd65c
பொதுமக்களின் மனநலத்தை மேம்படுத்தும் தேசிய முயற்சியின் ஓர் அங்கமாக புதிய சேவை தொடங்கப்படுகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைக்கும் தொலைவில் உதவி கிடைக்கவிருக்கிறது.

தேசிய மனநல உதவிக்கான தொலைபேசி, குறுந்தகவல் சேவை 2025ஆம் ஆண்டின் மத்தியில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களில் யாராவது மன உளைச்சலை எதிர்நோக்கினால் இந்தச் சேவையுடன் தொடர்புகொண்டு மனவியல் முதலுதவியைப் பெறலாம்.

தொலைபேசி வழியாகவே, குறுந்தகவல் வழியாகவோ பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் பொதுவான மனநலப் பிரச்சினைகளை அக்கறையுடன் கேட்டு பதிலளிப்பார்கள்.

தற்போதைய சூழலில் சவால்களை எதிர்நோக்குபவர்களுக்கும் மனநலம் தொடர்பான ஆரம்ப அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் அவர்கள் ஆலோசனை வழங்குவர்.

நீண்டகால மனநல சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்குத் தகுந்த சுகாதார சேவைகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி திங்கட்கிழமை (செப் 16) தெரிவித்தார்.

மனநலக் கழகத்தில் நடைபெற்ற இளம் சிங்கப்பூரர்கள் மாநாட்டில் அவர் பேசினார்.

மைண்ட்லைன்.எஸ்ஜி ( mindline.sg ) நடத்தும் குறுந்தகவல் சேவையும் இதில் அடங்கும். காரணம், சிலர், குறுந்தகவல் வழியாக உதவி பெறுவதையே விரும்புவார்கள் என்றார் அவர்.

மனநல உதவிக்கான தொலைபேசி, குறுந்தகவல் சேவை 24 மணி நேரமும் செயல்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.

தேசிய அளவில் மனநல மேம்பாட்டிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்த புதிய சேவை தொடங்கப்படுகிறது.

சுகாதார அமைச்சு, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் புதிய தேசிய மனநல சுகாதார அலுவலகத்தில் அங்கம் வகிப்பார்கள்.

2025ஆம் ஆண்டில் இச்சேவை முழுமையாகத் தயாராகிவிடும். இது, எதிர்கால அமலாக்க உத்திகளையும் மனநல பராமரிப்பு மேம்பாடுகளையும் மேற்பார்வையிடும்.

குறிப்புச் சொற்கள்