புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களுக்கு எதிராக சட்ட, ஒழுங்குமுறை நடவடிக்கை: சண்முகம்

புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களுக்கு எதிராக சட்ட, ஒழுங்குமுறை நடவடிக்கை: சண்முகம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Oct 2026 - 5:05 pm

2 mins read

சிங்கப்பூரின் புகைமூட்ட நிலவரத்துக்குக் காரணமான நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மூத்த அமைச்சர் கா.சண்முகம் உறுதியளித்துள்ளார்.

திங்கட்கிழமை (அக்டோபர் 19) உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்நிறுவனங்கள் ஏற்படுத்தும் தீயைத் தடுக்க தேசிய சுற்றுப்புற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளதைச் சுட்டினார்.

“அந்நிறுவனங்கள் தீ மூட்டுவதை நிறுத்திவிட்டதை ஆக்ககரமான ஆதாரங்களுடன் நிரூபிப்பது அவசியம். ‘ஸீரோ பர்னிங்’ எனப்படும் தீ மூட்டத்திற்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறினால் மட்டும் போதாது,” என்று அவர் வலியுறுத்தினார்.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான அவர், நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சட்ட, ஒழுங்குமுறை, பொருளியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் என்று உறுதிக் கூறினார்.

சிங்கப்பூரில் பதியப்பட்டுள்ள, புகைமூட்டத்துடன் தொடர்புடைய ஏழு வேளாண்-வணிக நிறுவனங்களிடம் சிங்கப்பூர் பங்குச்சந்தை விசாரணை நடத்தியுள்ளது.

காட்டுத் தீயுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிய வங்கிகள் குறித்துக் குறிப்பிட்ட திரு சண்முகம், சுற்றுச்சூழல், சட்ட விவகாரங்களால் எழும் இடர்களை வங்கிகள் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.

வங்கிகளைக் கண்காணிக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையம், “வங்கிகள் தங்களின் இடர்களைச் சரியாகக் கையாள்கின்றனவா என்பதை உறுதிசெய்ய அவற்றின்மீது தனது மேற்பார்வை அதிகாரத்தைச் செலுத்தும் என்பது உறுதி,” என்று அவர் விவரித்தார்.

அதோடு, அந்நிறுவனங்கள் சிங்கப்பூர் அரசாங்கச் சலுகைகள், மானியங்கள் போன்றவற்றைப் பெறுகின்றனவா என்பதும் அவற்றுக்கான தரநிலைகளை அந்நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக திரு சண்முகம் சொன்னார்.

“நிறுவனங்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் புகைமூட்டத்திற்கு எதிரான அதன் தற்போதைய சட்டதிட்டங்களை மாற்றியமைக்கவோ புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவோ தயங்காது,” என்றார் அவர்.

புகைமூட்டம் கடந்த பிறகும் இனிமேல் நிறுவனங்கள் தீ மூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க தேவையான வலியுறுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று அவர் உறுதியளித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ புகைமூட்டத்திற்குப் பங்களிப்பதாக நம்பப்படும் கலிமந்தானில் அமைந்துள்ள மேலும் மூன்று நிறுவனங்களுக்குப் புகைமூட்ட தடுப்புச் சட்டத்தின்கீழ் தேசிய சுற்றுப்புற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளதாகக் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்) புகைமூட்டத்திற்குப் பங்களிப்பதாக நம்பப்படும் கலிமந்தானில் அமைந்துள்ள மேலும் மூன்று நிறுவனங்களுக்குப் தேசிய சுற்றுப்புற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளதாகக் கூறினார். சந்திப்பில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்கும் சுகாதார அமைச்சுக்குமான துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாமும் (வலது) கலந்துகொண்டார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்) புகைமூட்டத்திற்குப் பங்களிப்பதாக நம்பப்படும் கலிமந்தானில் அமைந்துள்ள மேலும் மூன்று நிறுவனங்களுக்குப் தேசிய சுற்றுப்புற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளதாகக் கூறினார். சந்திப்பில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்கும் சுகாதார அமைச்சுக்குமான துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாமும் (வலது) கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதுவரை அந்த பத்து நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்பதையும் அவர் சுட்டினார்.

சிங்கப்பூரின் உயிர்வாயு இந்தோனீசியக் காடுகளிலிருந்துதான் வருகிறது என்று கூறிய இந்தோனீசிய அதிகாரியின் கருத்து வருத்தமளிப்பதாகவும் அது தவறானது மூத்த அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

அக்கருத்து இந்தோனீசிய அரசின் கருத்துக்கும் அந்நாட்டு மக்களின் கருத்துக்கும் முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ எடுத்திருக்கும் புதிய முயற்சிகளான தீயணைப்பு, பேரிடர் நிவாரண அமைப்பின் தலைவரை மாற்றுதல், மரங்களை வெட்டி எரிக்கும் போக்குக்கு எதிரான கண்டனங்கள் போன்றவற்றைச் சிங்கப்பூர் ஆதரிப்பதாக திரு சண்முகம் கூறினார்.

வெளிப்புறங்களில் பணிபுரியும் சிங்கப்பூர் அதிகாரிகளுக்குப் புகைமூட்டத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான ஆதரவு வழங்கப்படுமென்று அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்