பாரிஸ்: பிரான்சின் தென்பகுதியில், மார்சே நகருக்கு அருகே உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் ஆசிரியர்களை நோக்கி வேட்டைத் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்ததாக உள்ளூர் மேயர் தெரிவித்திருக்கிறார்.
திங்கட்கிழமை (அக்டோபர் 12) நடந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியரும் பெண் ஊழியரும் காயமுற்றதாக அவர் சொன்னார்.
காவல்துறையினர் வருவதற்குள் ஜோசப் லாகனல் கல்லூரியின் மேற்பார்வையாளர் ஒருவர் அந்த 14 வயது மாணவரை மடக்கிப் பிடித்து ஆயுதத்தைப் பறித்ததாக ஓபான் வட்டார மேயர் ஜான்-பியர் ஸ்கில்லாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்; இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏதுமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
அந்த 14 வயது மாணவர், கித்தார் இசைக்கருவிப் பெட்டியில் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்தது கண்காணிப்புப் படக்கருவியில் தெரியவந்ததாக அந்நாட்டுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
பிரான்சில் மூன்று வாரமாக மேல்நிலைப் பள்ளிகளை உலுக்கிவரும் போராட்டங்களுக்கும் அண்மைச் சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதற்கு உடனடி ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது.
பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோன் திங்கட்கிழமை போராட்டங்களினால் மூண்ட கலவரங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
