உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நேரத்துக்கு மருந்து மாத்திரைகளை எடுக்காமல் இருப்பது, வாழ்க்கைமுறை மாற்றங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் போவது போன்ற சவால்களை எதிர்கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அதன் விளைவாக அவர்களின் ரத்த அழுத்தம் முறையாகக் கட்டுப்படுத்தப்படாமல் வாதம், மாரடைப்பு ஆகியவற்றால் அவர்கள் எளிதில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது.
டியூக் - என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் அமைப்பும் இரண்டு பலன்களைத் தரக்கூடிய ஒரே மாத்திரையின் மூலம் அதை நிவிர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன.
அதுதொடர்பாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் உயர் ரத்த அழுத்தம் உள்ள 900க்கும் அதிகமான நோயாளிகளிடம் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் கிடைத்த நல்ல பலனை அடுத்து சிகிச்சை அணுமுகுறை கூடுதல் நோயாளிகளுக்கு விரிவுபடுத்த ஆய்வு குழு முடிவெடுத்துள்ளது.
புதிய சிகிச்சை முறையால் நோயாளிகளில் ஏறக்குறைய 61 விழுக்காட்டினரின் ரத்த அழுத்தம் ஆரோக்கிய நிலைக்குக் குறைந்தது.
மேலும், கூடுதல் நோயாளிகளிடையே பத்தாண்டுகளில் ஏற்படக்கூடிய மாரடைப்புக்கான சாத்தியமும் கணிசமாகக் குறைந்தது.
குறைந்த செலவில் உள்ள புதிய பராமரிப்பு முறையைத் தற்போதைய அடிப்படை பராமரிப்புக் கட்டமைப்பில் இணைப்பது சுலபம் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.
இரண்டு பலன்களைத் தரக்கூடிய ஒரே மாத்திரையுடன் ஆலோசனை, தாதிகளின் தொடர் பராமரிப்பு ஆகியவற்றுக்கான மாதாந்திரக் கட்டணம் ஒவ்வொரு நோயாளிக்கும் $20.
தொடர்புடைய செய்திகள்
பலதுறை மருந்தகங்களில் கழிவு கட்டணத்தில் கிடைக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கான பரமாரிப்பைவிட புதிய பராமரிப்புத் திட்டம் $3லிருந்து $4 அதிகமாக இருந்தாலும் அது நீண்டகாலத்துக்குப் பயனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சின் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்ற அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளையும் குழு அணுகியது.
இரண்டு பலன்களைத் தரக்கூடிய ஒரே மத்திரைக்குக் கழிவுகள் போன்றா அரசாங்க உதவிகள் வழங்கப்பட்டால் நோயாளிகளின் செலவு குறையும் என்றும் ஆய்வுக்குழு குறிப்பிட்டது.

