சிங்கப்பூர் முழுவதும் நிலப் போக்குவரத்து ஆணையத்தால் நவம்பரில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், விதிமீறிய 140க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு அழைப்பாணைகள் வழங்கப்பட்டன.
அளவுக்கு மீறிய சுமையை ஏற்றிச் சென்றது, தேவையான அனுமதியின்றி விரைவுச்சாலைகளில் சென்றது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இந்த வாகனங்களுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டதாக ஆணையம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
விரைவுச்சாலைகளில் செல்வதற்குத் தடைசெய்யப்பட்ட நிலையில், செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லாமல் அங்கு சென்ற ஏறக்குறைய 60 பெரிய அளவிலான வாகனங்கள் பிடிபட்டன.
இத்தகைய வாகனங்களின் அளவு, எடை காரணமாக இவை போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்பதோடு சாலை அமைப்புகளுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடும் என்று ஆணையம் சொன்னது.
மேலும் 85 கனரக வாகனங்கள், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எடையை ஏற்றிச் சென்றது கண்டறியப்பட்டது.
இத்தகைய வாகனங்கள் அளவுக்கு மீறிய சுமையை ஏற்றிச் செல்வதால், சாலையில் சரக்குகள் விழும் ஆபத்து நிலவுகிறது. அதே நேரத்தில், வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயமும் கூடுகிறது.
“இத்தகைய செயல்களால் சாலைகளைப் பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கப்படுகிறது. விதிமீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்,” என்று ஆணையம் கூறியது.

