இந்தியாவில் உள்ள எண்ணற்ற விதிமுறைகளால் எழும் சவால்களையும் சிக்கலான வர்த்தகச் சூழலையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்துப் பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் சிங்கப்பூரின் இந்திய வர்த்தகத் தலைவர்கள் புதன்கிழமை (அக்டோபர் 21) மாலை நடைபெற்ற முதலாவது ‘தப்லா!’ உரையாடல் தொடரில் ஒன்றுகூடினர்.
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் முன்னணி ஆங்கில வார இதழான ‘தப்லா!’வின் 18வது ஆண்டு நிறைவை ஒட்டி, ‘தப்லா! தலைமைத்துவ உரையாடல் தொடர்’ என்னும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வெளியுறவு, எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் பங்கேற்றார்.
‘தப்லா!’வின் மேற்பார்வை ஆசிரியர் த.ராஜசேகர் நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
“முன்னணி வர்ததகப் பேராளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர, வளர்ந்துவரும் தொழில்முனைவோரை முன்னிலைப்படுத்த, வர்த்தக வளர்ச்சியைப் பதிவுசெய்ய, சமூகத்திற்குள் இருக்கும் புத்தாக்கம், தலைமைத்துவ மாண்புகளை எடுத்துரைக்க ‘தப்லா!’வில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘பிஸ்னஸ்’ பகுதியோடு இந்த உரையாடல் மிக அழகாகப் பொருந்திப்போகிறது,” என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் (சிக்கி) தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் மேனன், ‘தப்லா!’ உடனான இந்த இணைப்பை வரவேற்றார்.
முதன்முறையாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல், இந்தியாவில் தனது பரந்த பொருளியல் மற்றும் பலதுறை வணிகத் தொடர்புகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான வர்த்தக, தொழிற்சபையின் முன்னுரிமை இலக்கை வலியுறுத்துகிறது என்றார் அவர்.
இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக வளர்ந்து வருவதாகவும் அரசாங்க அளவில் மேலும் பலவற்றைச் செய்ய விருப்பம் உள்ளதாகவும் துணை அமைச்சர் கான் தமது உரையில் குறிப்பிட்டார்.
“இந்தியா அதிக ஆற்றல் கொண்ட பெரிய சந்தை, ஆனால் எளிதானது அல்ல. அங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் மிகவும் தன்னாட்சியுடன் செயல்படுகிறது. மேலும் வெவ்வேறு விதமான விதிகள், வர்த்தகச் சூழல் மற்றும் கலாசாரத்தை அந்நாடு கொண்டுள்ளது,” என்றார் அவர்.
சிங்கப்பூர் - இந்தியா வர்த்தகத்தையும் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வு ‘தப்லா!’, ‘சிக்கி’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
திருவாட்டி கானுடன் ‘சிக்கி’ நிர்வாகக் குழு உறுப்பினரும் சிஎஸ்டி வென்சர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு இயக்குநருமான சஞ்செய் சந்துருவும் கலந்துரையாடலில் பங்கேற்றார். அந்நிகழ்வை ‘தப்லா!’ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன் வழிநடத்தினார்.
