விநியோக இணைப்புகளைத் தொழில்நுட்பப் பிளவு துண்டிக்காது: ஓசிபிசி தலைமை நிர்வாக அதிகாரி

விநியோக இணைப்புகளைத் தொழில்நுட்பப் பிளவு துண்டிக்காது: ஓசிபிசி தலைமை நிர்வாக அதிகாரி

படம்: சுந்தர நடராஜ்

27 Nov 2026 - 11:28 am

2 mins read

தொழில்நுட்பத் தரநிலைகள் பிளவுபட்டு, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் தற்போது கடுமையாக்கப்பட்டு வந்தாலும் உலகளாவிய விநியோக இணைப்புகள் முழுமையாகத் துண்டிக்கப்படாமல் ஆழமாகப் பிணைந்தே இருப்பதாக ஓசிபிசி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் டெக் லோங் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெறும் ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாட்டில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் விநியோக இணைப்புகளைப் பன்முகப்படுத்தல், வட்டார ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசியாவிற்குள்ளான வர்த்தகமும் ஆசியான் முதலீடுகளும் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன என்று அவர் சொன்னார்.

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளிலும் பிளவு ஏற்படக்கூடும் என்று அவர் சுட்டினார்.

“செலவையும் பாதுகாப்பு அம்சங்களையும் சமநிலைப்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கான உகந்த பாதை, வெளிப்படையான, வெளிப்படையற்ற ஆதார மாதிரிகளின் கலவையாகவே தோன்றுகிறது,” என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான பங்குகள் குறித்துச் சந்தையில் பதற்றம் நிலவுகிறது. ஆயினும் வேகமாகக் குறைந்துவரும் செலவினம், நிறுவனங்கள் அதைப் பயன்படுத்துவதை மிகவும் எளிதாக்குவதால் செயற்கை நுண்ணறிவு நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்று திரு டான் தெரிவித்தார்.

குறைந்துவரும் செயற்கை நுண்ணறிவுச் செலவினம், அதிநவீன இணைய அச்சுறுத்தல்களுக்கும் மோசடிகளுக்கும் வழிவகுப்பதாகக் கூறிய அவர், வங்கிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இழப்புகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளதைக் கோடிகாட்டினார்.

நடப்பாண்டின் முதற்பாதியில் சிங்கப்பூரில் பதிவான மோசடி வழக்குகளில் ஆக அதிகமான தொகை முதலீட்டு மோசடிகளில் பறிபோனது என்றும் அத்தகைய மோசடிகளைத் தடுக்க மக்கள் கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது ‘சொந்த மின்சார ஏற்பாட்டு’ (BYO) அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதால் செயற்கை நுண்ணறிவுத் தரவு நிலையங்களின் மிதமிஞ்சிய மின்சாரத் தேவைகளை நிறைவேற்ற அந்நிறுவனங்கள் தூய்மை எரிசக்திப் புத்தாக்கத்தை விரைவுபடுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அம்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் ஹைட்ரஜன் எரிசக்தி முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தும் சிங்கப்பூர்த் தரவு நிலையம் ஒன்றுக்கும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் தரவு நிலையங்களுக்கும் ஓசிபிசி பசுமை நிதியுதவி வழங்கிவருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டை எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் முன்னணி ஊடகங்களான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ், சாவ்பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகியவை முதன்முறையாக ஒன்றிணைந்து நடத்துகின்றன.

இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதிப் பங்காளியாகவும் இணைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்