தெக் வாய் வட்டாரத்தில் கார் ஒன்று சாலை சமிக்ஞைமீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் அந்தக் காரை ஓட்டிவந்த 40 வயது ஆடவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்தது. இதனால், அவரைக் காவல்துறை வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 12) கைதுசெய்தது.
தெக் வாய் அவென்யூவுக்கும் சுவா சூ காங் சாலைக்கும் இடையே உள்ள சந்திப்பில் நடந்த விபத்து குறித்து அன்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
மேலும், சந்திப்பில் கார் சறுக்கியிருக்கக்கூடும் எனக் காவல்துறை கூறியது.
சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட கார் ஓட்டுநர் பின்னர், கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் ரெட்டிட் சமூக ஊடகத்தில் வெளியாகின.
அவற்றில், வெள்ளை நிறக் கார் ஒன்றின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்திருந்ததையும் கார் மோதிய வேகத்தில் சரிந்த சாலை சமிக்ஞை அறிவிப்பை அருகில் இருந்த புல்வெளியிலும் பார்க்க முடிந்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

