தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹல்திராமில் $1.3 பில்லியனுக்குமேல் மதிப்பில் பங்கு வாங்க தெமாசெக் பேச்சுவார்த்தை

2 mins read
cdd50a87-ad02-44e6-aa95-19e42f90e3cb
ஹல்திராமில் 10 முதல் 15 விழுக்காடு வரை பங்கை வாங்க தெமாசெக் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் அறிந்தோர் கூறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘ஹல்திராம் ஸ்னேக்ஸ்’ நிறுவனத்தில் சிறிய பங்கை வாங்க தெமாசெக் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்த விவகாரம் பற்றி அறிந்தோர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பரிவர்த்தனை மூலம், இந்தியாவின் ஆகப்பெரிய தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹல்திராமின் மதிப்பு US$11 பில்லியன் (S$14.3 பி.) ஆகலாம்.

ஹல்திராமில் 10 முதல் 15 விழுக்காடு வரை பங்கை வாங்க சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் அறிந்தோர் கூறினர். அதன்படி, ஹல்திராம் நிறுவனத்தில் தெமாசெக்கின் பங்கு, US$1 பில்லியனுக்குமேல் (S$1.3 பி.) இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் தனிப்பட்டது என்பதால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த முதலீடு, ஹல்திராமின் முதல் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு (initial public offering) இட்டுச்செல்லும் முன்னேற்றப் படியாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அது பரிவர்த்தனைக்கு இட்டுச்செல்லாமலும் போகலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஹல்திராமில் பங்கை வாங்க மற்ற நிறுவனங்கள் விருப்பம் காட்டி வருவதாக தகவல் அறிந்தோர் கூறினர்.

இதுகுறித்து கருத்துரைக்க தெமாசெக் நிறுவனப் பேச்சாளர் மறுத்துவிட்டார். ஹல்திராம் தரப்பில் இருந்தும் உடனடியாகப் பதில் எதுவும் வரவில்லை.

கங்கா பிஷன் அகர்வால் என்பவரால் 1930களில் வடஇந்தியாவில் நிறுவப்பட்ட ஹல்திராம், இனிப்பு, கார வகைகள் முதல் உறையவைக்கப்பட்ட உணவு, ரொட்டிகள் வரை பல உணவு வகைகளை விற்று வருகிறது. அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்தின்படி, டெல்லியிலும் அதைச் சுற்றிலும் 43 உணவகங்களை ஹல்திராம் நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்