சிங்கப்பூரில் ‘எஃப்1’ இரவுநேர கார் பந்தயம் 2023, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
அதை முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை, சிங்கப்பூரின் சில பகுதிகளில் ஆளில்லா வானுர்திகள், பட்டங்கள் போன்றவற்றைப் பறக்கவிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை இதைத் தெரிவித்தது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு கார் பந்தயத்தைப் படமெடுக்க ஏதுவாக தாழப் பறக்கும் ஹெலிகாப்டருக்கு உதவும் நோக்கில் இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள வட்டாரங்களில், தரைப் பகுதி முதல், கடல்மட்டத்திலிருந்து 4,000 அடி உயரம் வரை பட்டங்களையோ பலூன்களையோ ஆளில்லா வானூர்திகளையோ ஆணையத்தின் அனுமதி இன்றிப் பறக்கவிடக் கூடாது.
மீறினால், அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட வட்டாரங்களோடு, வழக்கமாகத் தடை நடப்பிலிருக்கும் பகுதிகளிலும் பட்டம், பலூன், ஆளில்லா வானூர்தி போன்றவற்றைப் பறக்கவிடக் கூடாது என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரம், அபாயகரமானவை என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள், தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகள், பாதுகாக்கப்படும் வட்டாரங்கள் ஆகியவை அவை.
தொடர்புடைய செய்திகள்
தடை குறித்த மேல்விவரங்களுக்கு ‘ஒன்மேப்.எஸ்ஜி’ இணையத்தளம் அல்லது ‘ஒன்மேப்’ செயலியை நாடலாம்.

