இளையோரிடம் பாலியல் குற்றங்களும், மூத்தோரிடம் மோசடிகளும் அதிகரிப்பு

வயதுக்கேற்ப மாறும் இளையர் குற்றப் போக்கு

இளையோரிடம் பாலியல் குற்றங்களும், மூத்தோரிடம் மோசடிகளும் அதிகரிப்பு

தகவல்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வரைகலை: ஹஃபிஸா ஐனி

29 Sep 2026 - 6:01 pm

2 mins read

சிங்கப்பூரில் இளையர்கள் ஈடுபடும் குற்றச் செயல்களின் தன்மைகள் அவர்களின் வயதுப் பிரிவுக்கு ஏற்ப மாறுபடுவதாக தெரியவந்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான ‘இளையர் மறுவாழ்வு ஆதரவின் போக்குகள் அறிக்கை’யை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்டது சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு.

அதில்,  இளையர் குற்றச்செயல்களில் தென்படும் போக்குகள் குறித்த தகவல்கள் முக்கிய இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 10 முதல் 16 வயதுக்குட்பட்ட இளையப் பிரிவினரிடையே திருட்டு, பாலியல் தொடர்பான குற்றங்களே முதன்மையாகப் பதிவாகியுள்ளன. 

கடந்த ஆண்டில் களவு சார்ந்த பிரிவில் 326 பேர் குற்றம் புரிந்துள்ளனர். இதில் கடைகளில் திருடுவதே மிகவும் பொதுவானதாக உள்ளது. 

குறிப்பாக, இரண்டாவதாக இளையர்களிடையே காணப்படும் பாலியல் குற்றங்களில் 16 வயதிற்குட்பட்ட சிறார் சம்பந்தப்பட்ட பாலியல் அத்துமீறல் குற்றங்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளன. 

பாதிக்கப்பட்டவரின் சம்மதம் இருந்தாலும், 16 வயதிற்குட்பட்டவர்களுடன் ஈடுபடும் இத்தகைய செயல்கள் சட்டப்படி தீவிரக் குற்றமாகக் கருதப்படுகின்றன.  

மறுபுறம், 16 முதல் 21 வயது வரையிலான நடுத்தர மூத்த இளையர்களிடையே ஏமாற்று வேலைகள், இணையம்வழி பண மோசடிகள் முன்வரிசையில் நிற்கின்றன.

இவர்கள் பெரும்பாலும் மோசடி கும்பல்களின் பணப் பரிவர்த்தனைகளுக்குத் துணைபோகும் இடைத்தரகர்களாகப் பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. 

நடுத்தர வயதினரிடையே மோசடிக் குற்றம் 2024ல் 229 ஆக இருந்து 2025ல் 270 ஆகவும், மூத்த இளையர்களிடையே இது 574ல் இருந்து 782 ஆகவும் அதிகரித்துள்ளது. 

இந்தப் பிரிவினரிடையே பாலியல் குற்றங்கள், திருட்டுக் குற்றங்கள் அதற்கடுத்த இடங்களில் உள்ளன.

பெண்களிடையே 2025ஆம் ஆண்டில் ஏமாற்று வேலைகளே முதன்மை குற்றப் பிரிவாக மாறியுள்ள நிலையில், ஆண்களிடையே 2023ஆம் ஆண்டிலிருந்தே இதுவே முதலிடத்தில் நீடிக்கிறது.  

இளையர்களிடையே அதிகரிக்கும் இத்தகைய குற்றங்களைத் தடுக்க, கல்வி அமைச்சு காவல்துறையுடன் இணைந்து பள்ளிகளில் பாலியல் குற்றத் தடுப்பு வழிகாட்டல்கள், இணைய மோசடி விழிப்புணர்வு வகுப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்