2023ல் சிங்கப்பூரர்கள் செல்ல விரும்பும் இடங்கள் இவை

2023ல் சிங்கப்பூரர்கள் செல்ல விரும்பும் இடங்கள் இவை

1 mins read
2eb39f08-fedc-43cf-8de4-bc4b12fd76e2
இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள டென்பசாருக்குச் செல்ல அதிகமான சிங்கப்பூரர்கள் விருப்பம் காட்டி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூரில் ஜூன் பள்ளி விடுமுறையும் சில நீண்ட வாரயிறுதிகளும் வரவுள்ள வேளையில், சிங்கப்பூரர்கள் செல்ல விரும்பும் 10 இடங்களின் பெயர்களை கூகல் நிறுவனம் அறிவித்துள்ளது.

சோல், தோக்கியோ போன்ற பிரபலமான நகர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், அவை முதலிரு இடங்களில் வரவில்லை.

அந்தப் பெருமை, இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள டென்பசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீவுக்குச் செல்வது குறித்து ஆக அதிகமானோர் விசாரித்துள்ளனர்.

கடற்கரைகளுக்கும் கோயில்களுக்கும் டென்பசார் பெயர்போனது. அங்குள்ள உள்ளூர் உணவு வகைகளும் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமானவை.

டென்பசார், தோக்கியோ, பேங்காக், லண்டன், சோல், தைப்பே, ஒசாகா, மெல்பர்ன், பாரிஸ், சிட்னி ஆகியவை முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

"சிங்கப்பூருக்கு அருகிலுள்ள இடங்களுக்குச் செல்ல மக்கள் விரும்புவதை எங்களது தரவு காட்டுகிறது. சிங்கப்பூரர்கள் செல்ல விரும்பும் 10ல் எட்டு இடங்கள், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ளன," என்று கூகல் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் பென் கிங் கூறினார்.

"இவ்வாண்டில் 11 பொது விடுமுறைகளும் ஏழு நீண்ட வாரயிறுதிகளும் இருப்பதால், விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பதற்கான வழிகளை சிங்கப்பூரர்கள் தேடி வருகின்றனர்," என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, இவ்வாண்டின் முதல் காலாண்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு அதிகமான பயணிகள் வந்ததாக கூகலின் தரவு கண்டறிந்தது.

மரினா பே சேண்ட்ஸ், மெர்லயன் பூங்கா, செந்தோசா ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டுப் பயணிகள் அதிகமானோர் சென்று வந்தனர்.